டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு மற்றும் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும், இண்டியா கூட்டணி சார்பில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய கார்கேவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டள்ளது.

பீகார் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியது. கடந்த வாரம் வாக்கு திருட்டு தொடர்பாகப் பல புகார்களை ராகுல்காந்தி முன்வைத்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் நடைபெற்று வருவதால், அங்கேயும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்றும் காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து இண்டியாக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவும், இண்டி கூட்டணி சார்பில் காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சுப்ரியா சுலோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள் இண்டி கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்தல் ஆணையம், பீகார் தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தியதுடன், ராகுல்காந்தி ஓட்டு திருட்டு என்று கூறுவது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் என விமர்சித்த தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனையி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற நாடாளுமன்றத்தில் வெற்றி பெற 3ல் இரு பங்கு ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை இறுதி செய்ய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர். ராகுலுடன் ஆலோசனை நடத்திய பிறகு துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே டெல்லி நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான நாடாளுமன்ற தீர்மானம் நிலுவையில் உள்ள நிலையில், ஞானேஷ்குமார் மீது தீர்மானம் கொண்டு வந்தால், அதை பாஜக ஆதரிக்காது என்பதால், அந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.