டில்லி

க்களவையில் சென்ற வாரம் நிறைவேறிய ஆதார் விருப்ப அடையாள மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆதார் அட்டையுடன் பான் அட்டை, எரிவாயு இணைப்பு, சிம் கார்டு உள்ளிட்டவைகள் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அரசின் ஒரு சில மானிய திட்டங்களை விட மற்றவைகளுக்கு ஆதார் அவசியம் அல்ல என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி ஆதாரை விருப்பத்தின் பேரில் அடையாளமாக உபயோகிக்கலாம் என அரசு கூறியது.

இதற்கான சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த சட்ட திருத்த மசோதாவில், “ஆதாரை விருப்பத்தின் பேரில் மக்கள் அடையாளமாக பயன்படுத்தலாம். தனிநபர் ரகசியம், பாதுகாப்பு பிரச்னைகள் இதில் ஏற்படாது. ஆதாரில் சம்பந்தப்பட்டவர் பெயர், தந்தையின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். அவரது ஜாதி, மதம், மருத்துவ விவரங்கள் போன்றவை இருக்காது” என கூறப்பட்டது.

இந்த மசோதா கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்ப்பட்டது. இந்த மசோதா இந்த மாதம் நான்காம் தேதி அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றாப்பட்டது. இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது இந்த மசோதா இங்கும் நிறைவேறிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டு சட்டமாக்கப்படும்.