சிக்மகளூர்:

பிரபல கஃபே காஃபி டே  நிறுவனர் சித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்துக்கு துக்கம் அணுசரிக்கும் விதமாக, இன்று சிக்மகளூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றன.

 

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போதைய பா.ஜ.க. வின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. இவர் நாடு முழுவதும் உள்ள பிரபல காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

இவர், கடன் மற்றும் வருமான வரி பிரச்னையில் சிக்கியுள்ளதாக குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று முன்தினம், தனது காரில் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் வழியில், நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறி இறங்கி உள்ளார்.

சிறிது தூரம் போனில் பேசியபடி நடந்து சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரைத் தேடிய ஓட்டுநர், அவரது செல்போனில் பேச முயற்சிக்க, அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டதால், உடனே அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

இந்த விவரம் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர் எழுதியுள்ள கடிதங்களை வைத்து, சித்தார்தா தற்கொலை செய்துகொள்ள வாய்பிருப்பதாக கருதிய காவல்துறையினர், நேத்ராவதி ஆற்றில் தேடத் தொடங்கினர். தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடுதல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிக்மகளூர் மாவட்டம் முழுவதும் இன்று மறைந்தசித்தார்த்தருக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.