சென்னை: ஐபிஎல் 13வது சீசனில் டைட்டில் ஸ்பான்சர் என்ற அந்தஸ்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தும் விலகியுள்ளது சீன நிறுவனமான ‘விவோ’.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி சம்பவத்தையடுத்து, இந்தியாவின் சீன எதிர்ப்பு மனநிலை அதிகரித்தது. இதனையடுத்து, ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ‘விவோ’ நிறுவனம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டது.

இதன்மூலம், ஸ்டார் தொலைக்காட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. சீனாவின் இந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம்(விவோ), கலர்ஸ் நிறுவனத்துடன் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவிற்காக, ரூ.60 கோடிகள் மதிப்பிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில், சீன எதிர்ப்பு மனோநிலை தணியாத சூழலில், பிக்பாஸ் 14வது சீசன் நிகழ்விலிருந்து விலகுவதாக அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்திற்கு பதிலாக, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஸ்பான்சராக மொபைல் பிரீமியர் லீக்(MPL – online gaming platform) ஸ்பான்சராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.