ஜக்கி மேடையில் விவேக்: தொழிலா, தொண்டரா?

Must read

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்களது முகநூல் பதிவு:

நடிகர் விவேக்… சொந்தக் கற்பனையோடு நகைச்சுவைக் காட்சிகளை அமைக்கக்கூடியவர். முன்பு ஒரு ரஜினி படத்தில் (‘உழைப்பாளி’?) அவரைச் சுற்றி வருகிற கும்பலில் ஒருவராக விவேக் ஓரங்கட்டப்பட்டிருந்ததில் நான் வருந்தியிருக்கிறேன்.

‘செம்மலர்’ இதழுக்காக அவரை பேட்டி கண்டபோது அவர் அளித்த செரிவான பதில்களில் மகிழ்ந்திருக்கிறேன். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அரசியல், சமூகக் கருத்துகள் சொல்லப்பட்டு வந்திருக்கிற பாரம்பரியம் பற்றி ஈடுபாட்டுடன் பேசினார். கூத்துகளில் நாயகப் பாத்திரங்கள் கதையை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க கோமாளிப் பாத்திரத்தில் வருகிறவர் உள்ளூர் பண்ணையாரைக் கிண்டலடிக்கவும் அரசாங்கத்தை விமர்சிக்கவும் பார்வையாளர்கள் அனுமதிக்கிற தமிழ்ச்சூழல் பற்றி நான் கேட்டபோது அவர், ”விதூஷகனுக்கு சமூகம் வழங்கிய அங்கீகாரம்,” என்று கூறியது எனக்கு மிகவும் பிடித்திருநதது. பல நிகழ்ச்சிகளில் அதை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

படங்களில் முற்போக்கான கருத்துகளையும் பகுத்தறிவுச் செய்திகளையும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சிந்தனைகளையும் சிரிப்போடு சிரிப்பாக அவர் சொல்லத் தொடங்கியிருந்ததை வரவேற்றுதான் செம்மலரில் அவரைப் பேட்டிகண்டு வெளியிட முடிவு செய்தோம். பின்னர் வந்த எதிர்ப்புகள் கண்டு அவர் பின்வாங்கினார். ஏதோ பிரச்சனையில் தன் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தினார். பெண்களை மட்டம் தட்டுகிற மாமூல் ஜோக்குகளை உதிர்க்கிறவரானார். இருந்தபோதிலும் ‘உத்தமபுத்திரன்’ படத்தில் அவருடைய நடிப்பை என்னால் ரசிக்க முடிந்தது.

நேற்று ஒரு ஃபிளக்ஸ் போர்டு விளம்பரம் பார்த்தேன்.

ஜக்கி வாசுதேவர் துவங்கியுள்ள நதி பாதுகாப்பு பயணத்தின் சென்னை நிகழ்ச்சியை விவேக் தொகுத்தளிக்கிறாராம். தொழிலாகச் செய்கிறாரா, தொண்டாகவே செய்கிறாரா தெரியவில்லை. எப்படியானாலும் அது அவருடைய சொந்த விருப்பம், அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. ஆசிரம அதிபர்களையே கூட சில படஙகளில் அவர் கேலி செய்திருப்பது நினைவுக்கு வருகிறது.

நந்தனார்களை எரிக்க வரும் நீட் நெருப்பு பற்றி இப்போதுதான் ஒரு நடிகர் தீயாக எழுதி யிருக்கிறார்.

ஒரு நடிகர் மீது புதிய மதிப்பு ஏற்படுகிறது.

இன்னொரு நடிகர் மீது இருந்த மதிப்பும் சரிகிறது.

More articles

Latest article