விஷ்வகர்மா திட்டம் -நிறைகளும் குறைகள்

-சங்கமித்ரன்

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார், பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்திற்கு வழி வகுத்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாரம்பரிய திறன்கள் மற்றும் கைவினைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை இந்த திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளித்தது.

இந்தத் திட்டம் மூலம், நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ரூ.2 லட்சம் வரைமானியம் மற்றும் கடன் உதவி திட்டம் இதில் சிறப்பம்சங்கள் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் கைவினைஞர்களுக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சமும்,இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சமும் மானியத்துடன் கூடிய கடனாக 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.

இந்த நிகழ்வு செப்டம்பர் 17-ம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ரூ.13,000 கோடி நிதி செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. குலத் தொழிலுக்கு வழிவகுக்கும் விஸ்வகர்மா திட்டம் என்ற அந்தத் திட்டம் குறித்து ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அறிவித்த விஸ்வகர்மா திட்டத்திற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் மாறுபட்ட கருத்துகள் நிலவலாம் என்றாலும் இந்தத் திட்டம் இந்தியாவின் கைவினைத் திறனை இந்த உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கின்ற வகையிலேயே இருக்கிறது என்று விஸ்வகர்மா திட்டம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மறைமுகமாக பட்டும்படாமலும் சுட்டிக் காட்டியிருந்தார்.

பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு உடனடியாக விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிரான அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருந்தார் வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை, சாதியைக் காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ்–பாஜக ஆட்சியின் செயல்பாடாக உள்ளது. உயர்ந்தவன்–தாழ்ந்தவன்; தொடக்கூடியவன்–தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது இப்போதும்! குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, கிராமங்களிலும், நகரங்களிலும் அவரவர் குலத்தொழிலை கீழ்ஜாதியர் முப்பது லட்சம் பேர் விஸ்வகர்மா திட்டத்தில் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாளில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வீரமணி விடுத்த அந்த அறிக்கையே அந்தத் திட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவலாம் என்று நிதியமைச்சரை ஒருவேளை பேச வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது

பாரம்பரியமாக ஒரு தொழிலைச் செய்ய ஏன் வற்புறுத்த வேண்டும் – செருப்புத் தைப்பவர், துணி வெளுப்பவர், சிரைப்பவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற முடியாமலே இப்படி முட்டுக்கட்டை போடுவதை எப்படி ஏற்க முடியும்? தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை 1952-1953இல் ஓட ஓட விரட்டி, ஒழித்து சமத்துவ நாயகர் பச்சைத் தமிழர் காமராசர் துணையோடு, புது வாய்ப்புகளை உருவாக்கி வரலாறு படைத்த மண் பெரியார் மண்ணான திராவிட மாடல் ஆட்சி நடக்கும் இந்த மண்! தமிழ்நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரியம், ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்க உள்ளது

குல கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு குரல் தெற்கிலிருந்து

ஆகஸ்ட் 29ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர். குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமாக இருக்கின்ற விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து முதல்கட்டமாக சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செப்டம்பர் ஆறாம் நாள் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா

பொதுமுடக்க காலத்தில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிய தொழிலாளர்களிடமுள்ள திறன் குறித்த தரவுகளைத் தயாரித்துக் கொள்வது ஆத்மநிர்பார் என்ற தற்சார்பு சமூக-பொருளாதார அமைப்பின் கீழ் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவாக இருந்தது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அந்த நடவடிக்கையை மாநில அரசுகளின் உதவியுடன் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்கள் குறித்த தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் அமைச்சகம், தொழிலாளர்களின் வீடுகளுக்கு அருகே கிடைக்கும் வேலை வாய்ப்புகளை அவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் சான்றிதழ்களை வழங்கும் என்றே அந்தத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட திறன் குறித்த தரவுகளை விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா (VSSY) என்ற பெயரில் இயங்கி வந்த மாநிலத்தின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்வது என்று உத்தரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்தது.அவ்வாறு கடன் வசதிகளை வழங்கி நிதி அளிப்பதன் மூலம் பாரம்பரிய வர்த்தகங்களை விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டம் ஊக்குவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெறுவதற்கு அந்தத் தொழிலாளி முடிதிருத்துபவர், தையல்காரர், தச்சர், செருப்பு தைப்பவர், மிட்டாய் தயாரிப்பவர், பனை இலைகள் வேய்பவர், நெசவாளர், இரும்பு கொல்லர், கொத்தனார், பொற்கொல்லர் என்று பாரம்பரியத் தொழில்களில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாரம்பரிய வர்த்தகங்கள் இந்தியாவில் பெரும்பாலும் சாதி சார்ந்தவையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. எடுத்துக்காட்டாக செருப்பு தைப்பவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகளாக, முடி திருத்துபவர்கள், பொற்கொல்லர்கள், இரும்பு கொல்லர்கள் மற்றும் மிட்டாய் தயாரிப்பவர்கள் பெரும்பாலும் சூத்திரர்களாக இருக்கின்றனர். ஆக மாநிலத்தின் அந்தத் திட்டம் குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழில்களுக்கு கடன் தருகின்ற திட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்கள் பாரம்பரியத் தொழிலை விட்டு விலகி வேறு தொழில் நாடி வேறு மாநிலங்களுக்குச் சென்றிருந்த தொழிலாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்குள்ளேயே அடைத்து வைக்கும் தந்திரமாகவே அந்தத் திட்டம் இருந்தது.

உத்தரப்பிரதேச முதல்வருடன் வீடியோ அழைப்பு மூலமாக இணைந்து, அந்த ஆத்மநிர்பார் உத்தரபிரதேச ரோஜ்கர் யோஜனாவை பிரதமர் மோடி 2020 ஜூன் 26 அன்று துவக்கி வைத்தார். அந்த வீடியோ அழைப்பின் போது விஸ்வகர்மா திட்டத்திற்கான தரவுகளை வழங்கிப் பேசிய யோகி இன்று உத்தரப்பிரதேச விஸ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டத்தின்கீழ் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய வர்த்தகர்களுக்குத் தேவையான கருவிகள் பிரதமரின் புனிதக் கரங்களால் விநியோகிக்கப்படுகின்றன. இந்த ஐயாயிரம் பாரம்பரிய வர்த்தகர்களில், 1650 பேர் தையல்காரர்கள், 1088 பேர் இரும்பு கொல்லர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் போன்று உலோக வேலைகளில் ஈடுபடுபவர்கள், 250 பேர் கண்ணாடி தொடர்பான வேலைகளிலும், 130 பேர் மெத்தை தயாரிக்கும் வேலைகளிலும், 669 பேர் மிட்டாய் தயாரிப்புகளிலும், 212 பேர் முடி திருத்தும் பணியிலும், 137 பேர் கூடை செய்வதிலும், 120 பேர் மட்பாண்டங்கள் தயாரிப்பிலும், 95 பேர் கொத்தனார் வேலையிலும், 112 பேர் காலணி தயாரிப்பு வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவலை வெளியிட்டார்.

இந்தியாவில் வேலையின்மை விகிதாச்சாரம்

இந்தியாவில் வேலையின்மை விகிதாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருக்கும்போது மக்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க எந்த திட்டங்களையும் முன்னெடுக்காமல் . கிராமங்களில் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள் வேலைவாய்ப்புகளை உயர்த்தும் என்று நம்புவது சரியல்ல இது கிராமங்களில் உள்ள தலித்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரை அவரவர் தொழிலை செய்ய தகவமைத்துக் கொள்ள ஒரு வழிமுறையாக தான் அமையப் போகிற திட்டத்தில் அடுத்த பரிணாமம் தான் இந்த திட்டம்.

இந்தத் திட்டத்தின் எதிர்காலம் இவ்வளவு தினம் காத்துக் கொண்டிருந்து திடீரென்று இந்த திட்டம் செயலுக்கு வருவதற்கு முக்கியமான காரணம் 2024 தேர்தல் தான். நில உடமை சமுதாயம் தனக்கு கீழ் மட்டத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதிக்க வரம்பிலும் வேலை வாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவதை தடுக்க பல யுக்திகளை செய்து கொண்டுதான் இருக்கிறது அதன் விளைவாக தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது இது கண்டிப்பாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு நல்லது செய்வது போல சொல்லிக்கொண்டு அவர்களின் வருங்கால குழந்தைகளின் வாழ்க்கையை சிதைக்க முயற்சி செய்யும் இந்த திட்டத்தை அவர்களின் கல்வியை மேம்படுத்தவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்காகவும் பயன்படுத்த இந்த சட்டம் கண்டிப்பாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் அதை இனிவரும் காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் காந்தி அவர்கள் இந்த சட்டத்தில் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையையும் அடிப்படையான சட்ட கூறுகளையும் மாற்றி அமைப்பார் என்று உறுதியாக நம்புகின்றேன்..

கட்டுரை எழுதியவர்: சங்கமித்ரன் Everest minds