சென்னை: விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தாக்கல் மனுவை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம்  மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணைம் மற்றும் மாணிக்கம் தாக்கூர் எம்.பி. உத்தரவிட்டு உள்ளது.

நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாட்டின்  விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து போட்டியிட்ட  தேமுதிக வேட்பாள விஜயபிரபாகரன், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக குற்றம் சாட்டினார்.

வாக்கு  எண்ணிக்கையின்போது, விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனும், மாணிக்கம் தாக்கூரும் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே மாறி மாறி முன்னேறி வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிககம் தாக்கூர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில், விஜயபிரபாகரன் வெற்றிபெறுவார் என மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தோல்வி  அடைந்ததாக அறிவிக்கப்பட்டது அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இங்கு  போட்டியிட்ட மாணிக்கம்தாகூர் 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகளையும், விஜயபிரபாகரன் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகளையும் பெற்றனர்.

விஜயபிரபாகரனை விட,  காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் இந்த விவகாரம் பெரும் பேசும்பொருளாக மாறியது.  இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையின்போத இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் இந்ததேர்தல் முடிவு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்,  “விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.. 50, 60 வருடங்களாக கட்சி நடத்துகிறீர்கள்; ஆட்சியிலும் இருக்கின்றீர்கள். சின்னபையன் முதன்முறையாக தேர்தலில் நிற்கிறார், அவர் ஜெயித்தால் தான் என்ன? என்று காட்டமாக  கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும்,  “விருதுநகரில் மதியம் 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? சூழ்ச்சி செய்து, அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டரே, என்னால் அழுத்தம் தாங்க முடியவில்லை, என் போனை சுவிட்ச் ஆஃப் செய்கிறேன் என சொல்லக்கூடிய அளவு அவரது மனநிலையை கொண்டு செல்லும் அளவிற்கு தவறு நடந்துள்ளது.  அதனால்,  விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை செய்ய வேண்டும் ” என்று பிரேமலதா செய்தியாளர்கள் முன்னிலை யிலேயே கோரிக்கை  வைத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூர்,. பிரேமலதா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன்,   ”விஜயபிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அங்குதான் இருந்தார். அப்படி இருக்கும்போது தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கும் பிரேமலதாவின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கையின் போது எல்லோரும் இருந்தார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்தார் என கூறியிருந்தார். மேலும்,  மக்கள் அளித்த தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மக்களை குழப்புவதும் பொய் பேசுவதும் பிரேமலதாவிற்கு கைவந்த கலை. விஜயகாந்தின் அரசியலையும் முடித்து வைத்தவர் இவர்தான் என்று காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கிடையில்,  விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இதைத்தொடர்ந்து,  விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை  உயர்நிதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  தேர்தல் வேட்புமனுக்களில் மாணிக்கம் தாகூர் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை   விசாரித்த நீதிபதி சதீஷ்குமார்,  காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.