ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, தவான், அம்பத்தி ராயுடு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அடித்துள்ளார். இது விராட் கோலி அடித்த 40வது சதம் ஆகும்.

kohli2ndODI

இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சொந்த மண்ணில் ரோஹித் டக் அவுட்டானது இதுவே முதல் முறை. அதன்பின்னர் ஷிகர் தவானுடன் கேப்டன் விராட் கோலி இணை சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தனர். தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்து வீச்சில் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 38 ரன்களை எடுத்திருந்தது.

3விக்கெட்டுக்கு விராட் கோலியுடன், அம்பதி ராயுடு இணை சேர்ந்தார். இருவரும் ரன் எடுக்க முயற்சித்த நிலையில் 18 ரன்களிலேயே நாதன் லயன் பந்து வீச்சில் ராயுடு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 17வது ஒவர்களில் 75 ரன்களை சேர்த்திருந்தது.

அதன்பின்னர் வந்த விஜய் சங்கர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்கள் சேர்த்தார். அவரை தொடர்ந்து வந்த கேதர் ஜாதவ் 11 ரன்களிலும், தோனி ரன் எடுக்காமலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் விராட் கோலி நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 43.1 ஓவரில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச அளவில் அவரின் 40 வது சதமாகும்.

இதனை தொடர்ந்து கோலியுடன் இணைந்து ஜடேஜா பொறுப்புடன் விளையாடி வருகிறார். இதன் மூலம் இந்திய அணி 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்திருந்தது.