ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றுள்ளதன் மூலம், குறுகிய ஓவர் போட்டிகளுக்காக, இந்திய அணிக்கு தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற குரல்களுக்கு தற்காலிக முட்டுக்கட்டைப் போட்டுள்ளார் கேப்டன் கோலி.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பாக செயல்படுவதை ஒட்டி, இந்திய டி-20 அணிக்காவது அவரை கேப்டனாக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. கெளதம் கம்பீர் உள்ளிட்டவர்கள் இந்தக் கருத்தை உரக்க ஒலித்தனர்.
அதேசமயம், விவிஎஸ் லஷ்மண் போன்றவர்கள், அப்படியெல்லாம் மாற்றத் தேவையில்லை; கோலியே தொடரட்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
விராத் கோலிக்கு, நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவு எடுக்கும் திறன் குறைவாக உள்ளது என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு. ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இழந்தபோது இந்த விமர்சனத்திற்கு வலு கூடியது. ஆனால், மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்று தனது பக்கத்திற்கு சற்று வலுசேர்த்துக் கொண்டார் கோலி.
தற்போது, டி-20 தொடரை வென்றுள்ளதன் மூலம், தனக்கு பதிலாக ரோகித் ஷர்மாதான் சிறந்தவர் என்ற விமர்சனத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். மூன்றாவது டி-20 போட்டியையும் இவர் வெல்லும்பட்சத்தில், ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக, அந்நாட்டு மண்ணிலேயே சாதித்ததன் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு இவர் தற்காலிக முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் என்றே கூறலாம்!
அடுத்த சர்வதேச டி-20 தொடரில், ஏதோ ஒரு நாட்டுடன் இந்திய அணி மோதும் வரை, விராத் கோலிக்கு பிரச்சினை இருக்காது.