திருவனந்தபுரம்
அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு ரேங்க் பட்டியலை மதியாத கேரள அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது.
கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் தேர்வு ஒன்றை நடத்தியது. அந்த தேர்வு எழுதியவர்களின் ரேங்க் பட்டியல் வெளியானது. ஆனால் கேரள அரசு இந்த ரேங்க் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பணி வழங்கவில்லை என குறப்படுகிற்து. அது மட்டுமின்றி கேரள அரசு ரகசியமாகத் தற்காலிக பணிகளுக்கு இந்த பட்டியலில் இல்லாதோரைத் தேர்வு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கமான கேரள மாணவர் சங்கத்தின் ஆர்வலர்கள் கடந்த 24 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று கேரள சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது. இதில் 5 காவல்துறையினர் மற்றும் மாணவ ஆர்வலர்கள் காயம் அடைந்துள்ளனர்.
காவல்துறையினர் முதலில் மாணவர் பிரதிநிதிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக மாணவர் சங்கத் தலைவர் அபிஜித் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் மீது காவல்துறையினரை வன்முறை தாக்குதல் நடத்தக் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் தமக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் நேற்று போராட்டக்காரர்களில் சிலர் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் அவர்களைத் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.