கொல்கத்தா

ன்றைய வாக்குப்பதிவின் போது மேற்கு வங்க மாநிலத்தில் சில இசங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

தற்போது  7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆரம்பாக், உலுபெரியா, ஹூக்ளி, ஹவுரா, போங்கான், ஸ்ரீராம்பூர் மற்றும் பாரக்பூர் ஆகிய 7 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2019 தேர்தலில் இவற்றில் 5 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 2 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தன.

இன்றைய வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் மோதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  ஆயினும் வாக்குப்பதிவு சீரான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு, ஏஜெண்டுகளை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கவில்லை என்பன உள்ளிட்ட 1,036 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக அரம்பாக் தொகுதியில் உள்ள கனக்குள் என்ற பகுதியில் பூத் ஏஜெண்டுகளை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கவில்லை எனக்கூறி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

ஹூக்ளி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜி, தனது காரில் வாக்குச்சாவடிக்கு சென்று கொண்டிருந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காரை விட்டு இறங்கி வந்த லாக்கெட் சாட்டர்ஜி பதிலுக்கு அவர்களைப் பார்த்து கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஹவுரா, போங்கான் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல்கள் நடந்துள்ளன. ஒரு சில இடங்களில் வாக்காளர்களை பாஜக ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும், அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.