டெல்லி
வினேஷ் போகத் தனது ஓலிம்பிக் பின்னடைவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தோர் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆயினும் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே அவர் மனமுடைந்து மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
சமீபத்தில் வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில் பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டு அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் செய்தியாளர்களிடம் பேசுகையில், வினேஷ் போகத் இன்னொரு வீராங்கனைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்து ஒலிம்பிக்கிற்கு சென்றதாகவும், அதற்காக கடவுள் அவரை தண்டித்துள்ளார் என்றும் கூறினார். மேலும் அரியானாவில் எந்த ஒரு பா.ஜ.க. வேட்பாளரும் வினேஷ் போகத்தை எளிதில் தோற்கடிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.
வினேஷ் போகத் இது குறித்து,
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற பேச்சுகளை கேட்டு வருகிறோம். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது. நான் ஒலிம்பிக்கில் வெற்றி பெறாததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் கூறினால், அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும். அந்த பதக்கம் எனக்கு சொந்தமானது அல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சொந்தமானது. தேசத்தை அவமரியாதை செய்திருக்கிறார்கள்”
என்று தெரிவித்துள்ளார்.