மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 6 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின் ராஜினாமாக்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தகுதியான அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வடக்கு ரயில்வே அறிவித்தது.

போகட் மற்றும் புனியா இருவரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர், அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார்.

பணியில் இருந்து ராஜினாமா செய்ய மூன்று மாத கால அவகாசம் என்ற வழக்கமான நடவடிக்கையை தவிர்த்து இவர்களின் ராஜினாமாவுக்கு வடக்கு ரயில்வே உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த இரு மல்யுத்த வீரர்களுக்கும் வடக்கு ரயில்வே நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மீதான வழக்கமான நடவடிக்கை தான் என்று கூறப்பட்ட நிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் தங்கள் வேலையே ராஜினாமா செய்தனர்.

அவர்களின் ராஜினாமாவை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டதன் மூலம், போகட் மற்றும் புனியா இருவரும் இப்போது தங்கள் அரசியல் வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி தொடங்க உள்ளனர்.