பொத்தக்குடி,  சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் தெருவிளக்கு சுவிட்ச் போர்டில் பறவைக் கூடு கட்டி உள்ளதால் 40 நாட்களாக மக்கள் தெருவிளக்கு இன்றி வசிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொத்துக்குடி என்னும் சிற்றூரில் தெரு விளக்குகளுக்கான சுவிட்ச் போர்டை தினமும் இயக்கும் பணியை அங்கு வசிக்கும் கருப்பு ராஜா என்பவர் செய்து வந்தார்.  இந்த மெயின் சுவிட்ச் போர்ட் மூலம் ஊரில் உள்ள 35 தெரு விளக்குகள் எரிந்து வந்தன.  இவர் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி விடியற்காலை 5 மணிக்கு அணைத்து வந்தார்.

ஒரு நாள் கருப்பு ராஜா மதிய வேளையில் ஒரு சிறு பறவை ஒன்று அந்த போர்டுக்குள் பல குச்சிகளைச் சேகரிப்பதைப் பார்த்துள்ளார்.  ஓரிரு நாட்களில்  அங்கு கூடு கட்டிய அந்த பறவை மூன்று சிறு முட்டைகள் இட்டுள்ளது.   பச்சை, நீல வண்ணத்தில் இருந்த அந்த முட்டைகளைக் கண்டதும் அவருக்கு அந்த கூட்டை கலைக்க மனம் வரவில்லை.  எனவே இதையொட்டி அவர் தங்கள் ஊர் வாட்ஸ் அப் குழுவில் இதைப் பகிர்ந்தார்.

அதைக் கண்ட குழு உறுப்பினர்களும் அந்த கூட்டை காக்க முன் வந்தனர்.  அவர்கள் அனைவரும் இணைந்து ஊரிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களைத் தெருவிளக்கு இல்லாமல் வசிக்க வேண்டிக் கொண்டனர்.   மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டால் தாமும் ஒப்புதல் அளிப்பதாகப் பஞ்சாயத்துத் தலைவி காளீஸ்வரி கூறி உள்ளார்.

அனைத்து கிராம வாசிகளும் ஒப்புதல் அளித்ததை ஒட்டி கடந்த 40 நாட்களாக இந்த சிற்றூரில் தெரு விளக்கு ஏற்றப்படுவதில்லை.   சுவிட்ச் போர்டை இயக்கினால் மின்சாரம் பாய்ந்து கூட்டுப் பறவை மற்றும் குஞ்சுகள் இறக்கும் அபாயம் உள்ளதால் இன்றும் மக்கள் இருளில் நடமாடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]