ஸ்ரீஹரிகோட்டா:

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் இறக்கப்படும் போது, திடீரென கடைசி நேரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள், லேண்டர் சாதனைத் தேடி வந்தனர்.

இதற்கிடையில், நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர், நிலவில், விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பது தொடர்பான புகைப்படத்தை அனுப்பியது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்,  தரை இறங்கும்போது எதிர்பாராத விதமாக  நிலவில் விழுந்த ‘விக்ரம் லேண்டர்’ உடையாமல் சாய்ந்து கிடப்பதாகவும்,  விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இஸ்ரோ கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி சந்திரயான் விண்கலத்தை , ஜிஎஸ்எல்வி.மார்க III ஏவுகலன் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலமானது, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது. சந்திரயான்-2 ஆகஸ்டு 20ந்தேதி முதல்,  நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதைத்தொடர்ந்த சந்திரயான்-2ல் இருந்து விக்ரம் லேண்டர் சாதனம் தனியாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்த நிலையில், விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்,  அதன் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக மாற்றப் பட்டு வந்தது. இறுதியாக கடந்த 7ந்தேதி தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிலவில் இருந்து சுமார்  35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை (7ந்தேதி)  அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது. நிலவில் கால் பதிப்பதை ஆவலோடு நாட்டு மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், சுமார்  2.1 கிலோ மீட்டர் உயரத்தில் வந்தபோது, அதன் சுற்றுவட்டப்பாதை மாறி, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், லேண்டரை  கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில், நிலவின் தரையில் லேண்டர் விழுந்து கிடப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, லேண்டரை,  தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன், தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது லேண்டர் எந்தவித சேதாரமும் இல்லாமல், நிலவில் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.   தரை இறங்கும்போது வேகமாக கீழ் நோக்கி வந்த லேண்டர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு (மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் பள்ளங்களுக்கு இடையே) அருகிலேயே விழுந்து இருப்பது ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

லேண்டரின் 4 கால்களும் ஒரே சமயத்தில் நிலவின் தரை பகுதியை தொட்டு இருந்தால், அது சாய்ந்து இருக்காது, என்று தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், லேண்டர் வாகனம் வந்த வேகத்தில், அது  சாய்ந்து விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

லேண்டரில் உள்ள ஆன்டெனாக்கள்,  ஆர்பிட்டரை நோக்கியோ அல்லது பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தை நோக்கியோ இருந்தால்தான் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றும், இல்லையேல் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், லேண்டரின் வெளிப்புற பகுதியில் சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் இருப்பதாலும், உள்பகுதி பேட்டரிகள் நல்ல நிலையில் இருக்கும் என்பதாலும், அதற்கு மின்சார சப்ளை கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் லேண்டர் குறித்து தெளிவான படம் எடுக்கும் வகையில் ஆர்பிட்டர் சுற்றி வரும் உயரத்தை  50 கி.மீ. ஆக குறைப்பது பற்றியும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.