டில்லி
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் நிலவில் தரை இறங்கி இருக்கும் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா விண்ணில் செலுத்திய விண்கலமான சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலவின் பாதையில் சுற்றிக் கொண்டு உள்ளது. அதில் இருந்து பிரிந்த நிலவில் தரை இறங்கும் பகுதியான விக்ரம் லாண்டர் இன்று அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரை இறங்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விக்ரம் லாண்டருக்கும் பூமிக்குமான தொடர்பு 1.57க்கு துண்டிக்கப்பட்டது.
நிலவில் இருந்து 2.1 கிமீ தூரத்தில் விக்ரம் லாண்டர் இருந்த போது இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் லாண்டர் நிலவில் தரை இறங்கியதா அல்லது இறங்காமல் வெடித்துச் சிதறியதா என்பது குறித்து எவ்வித தகவலும் அறியப்படவில்லை. அந்தப் பகுதியில் ஏற்பட்ட ஏதோ தடங்கல் காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையொட்டி இஸ்ரோவில் தலைவரான சிவன் மிகவும் துயர் அடைந்துள்ளார். அவரை பிரதமர் மோடி கட்டி அணைத்து ஆறுதல் கூறியது பலரின் நெஞ்சத்தைத் தொட்டுள்ளது. உலக விஞ்ஞானிகள் பலரும் இது இந்தியாவுக்கு ஒரு சாதனை என பாராட்டு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவின் முன்னாள் இயக்குனரான சசிகுமார், “விக்ரம் லாண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது எதனால் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். விக்ரம் லாண்டர் தரை இறங்கி இருக்கலாம் எனவும் வெடித்துச் சிதறி இருக்கலாம் எனவும் கருத்துக்கள் கூறுகின்றன. என்னைப் பொறுத்தவரை விக்ரம் லாண்டர் வெடித்துச் சிதறி இருக்காது என நம்புகிறேன். மாறாகப் பத்திரமாகத் தரை இறங்கி இருக்கும். நாம் சிறிது பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.