மும்பை:
மகாராஷ்டிராவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவாசாயிகள் பேரணிக்குப் பின்னணியில் இருப்பவர் விஜூ கிருஷ்ணன் என்ற இளைஞர்.
ஆறு நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி நேற்று மும்பை வரை வந்து சேர்ந்தது. . 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டதாக கணிக்கப்படுகிறது.
நேற்று விவசாயிகள் மகராஷ்டிரா மாநில சட்டசபையை முற்றுகையிட்டார்கள்.
இந்த பேரணிக்குப் பின்னணியில் இருப்பவர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த கேரளாவை சேர்ந்த விஜு கிருஷ்ணன். இவருக்கு இள வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம். இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தற்போது இவர் அகில இந்திய கிசான் சபா என்ற விவசாயிகளுக்கான சங்கத்தில் துணை செயலாளராக இருக்கிறார். அதேபோல் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மேல்மட்ட குழுவில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.
பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் அரசியல் பிரிவு ஆசிரியராக இருந்த இவர், அந்த வேலையைவிட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.
இவர் ஜே.என்.யூ. வில் படித்த போதே நிறைய போராட்டங்கள் நடத்தி இருக்கிறார். தற்போது அங்கு குறைவான கட்டணம் வாங்கப்படுவதற்கு இவரது போராட்டங்களே காரணம்.
அதேபோல் பெண்களுக்கு எதிராக கல்லூரியில் நடக்கும் வன்முறையை ஒழிக்க, பாலியல் வன்முறைக்கு எதிராக இயக்கத்தை படிக்கும் காலத்திலேயே உருவாக்கினார்.
தற்போதைய விவசாயிகள் பேரணிக்கு முக்கியமான காரணங்களில் இவரும் ஒருவர். விவசாயிகளை சரியான வழியில் இயக்கியதில் இவரின் பங்கு அதிகம்.
இந்த வித்தியாசமான போராட்ட முறையை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுத்ததும், அதை வெற்றி பெற வைத்ததிலும் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு.
பேரணிக்கு முன் விவசாயிகளிடம் . போராட்டத்தை எப்படி அமைதியாக நடத்த வேண்டும் என்று நிறைய விஷயங்களை பேசியிருக்கிறார்.
விஜு கிருஷ்ணன் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ”இதை அரசியலாக்க பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க விவசாயிகள் செய்த போராட்டம். இதில் கட்சிகள் ஒரு கருவியாக மட்டுமே இருந்தன. நாங்கள் விவசாயத்திற்கு எதிராக பேசினால் விவசாயிகள் எங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும்” என்று தெரிவித்தார்.