தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தேசத்தில் தான் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை நடிகை விஜயசாந்தியால் பெற முடிந்தது.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலிலும் இறங்கினார். 1998 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் கோரி போராடிய கே. சந்திரசேகரராவுடன் கை கோர்த்தார்.
அவரது டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்து பணியாற்றி எம்.பி. தேர்தலிலும் வென்றார்.
2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரச்சாரக்குழு தலைவர் என்ற உயர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
கடந்த மக்களவை தேர்தலின் போது, காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த விஜயசாந்தி, பிரதமர் மோடியை “தீவிரவாதியை போன்றவர்” என்றெல்லாம் வர்ணித்தார்.
இந்த நிலையில் கடந்த பொது தேர்தலுக்கு பிறகு கட்சி நடவடிக்கைளில் தீவிரம் காட்டாமல் இருந்த விஜயசாந்தி டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்து விட்டு, மீண்டும் தாய் கட்சியிலேயே நேற்று இணைந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜயசாந்தி “தெலுங்கானாவில் கே.சந்திரசேகரராவ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது” என குற்றம் சாட்டியவர் “அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும்” என்று கூறினார்.
– பா. பாரதி