விஜய் சேதுபதியின் 46-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இயக்குநர் பொன்ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல், பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக படப்பிடிப்பு நடத்தப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து பிரபல ஆங்கில நளிதழின் புகைப்படக் கலைஞர் படமெடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உச்சகட்டமாக படக்குழுவினர் அவரை ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்சேதுபதி அங்கு வந்து இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருந்தபோது தடுத்து சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.

இதனைக் கண்டித்து சக பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட, சிறிது நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.