அகமதாபாத்:
குஜராத் மாநில புதிய முதல்வராக அம்மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக பட்டேல் சமூகத்தை சேர்ந்த நிதின் பட்டேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
குஜராத்தில் பாஜக முதல்வராக ஆனந்திபென் பதவி வகித்தார். படேல் சமூகத்தவரின் போராட்டம், சமீபத்திய தலித் மக்களின் போராட்டம் போன்றவற்றை அவர் திறம்பட கையாளவில்லை என்று விமர்சிக்கப்பட்டார். அதோடு ஊழல் புகாரும் எழுந்தது.. மேலும், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பாஜக ஆட்சி மீது சரமாரியாக புகார் அளித்தன.
இந்த நிலையில் தனக்கு75 வயதாகி விட்டதாக கூறி முதல்வர் பதவியை ஆனந்திபென் ராஜினாமா செய்தார். (பாஜகவில், 75 வயதில் அரசியலைவிட்டு ஓய்வு பெறுவது வழக்கம்.
இதையடுத்து பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் பாஜக எம்எல்ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
விஜய் ரூபானி, நிதின் பட்டேல், மற்றும் பூபேந்திரசிங் சுதசமா ஆகியோர் பெயர் முதலமைச்சருக்கான பட்டியிலில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் குஜராத்தின் புதிய முதலமைச்சராக மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டார். நிதின் பட்டேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.