சென்னை: தேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று நடிகர் விஜய் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில் பிரபல கட்சிகளின் அதிகாரமிக்க தலைவர்களாக கருதப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில், வர இருக்கும் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதே, தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவி வருவதும், சிலர் விலைபோகும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாரதியஜனதா கட்சி, மாற்று கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தியாளர்களை குறிவைத்து, தனது கட்சிக்கு இழுத்து வருகிறது. ஏற்கனவே ஏராளமான திரையுலக பிரபலங்களை கட்சியில் சேர்த்துள்ள நிலையில், கடந்த வாரம் நடிகை குஷ்புவையும் பாஜகவில் இணைத்துக்கொண்டது. இதையடுத்து, டைரக்டர் சந்திரசேகர் உப்ட மேலும் பல பிரபலங்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டைரக்டர் சந்திரசேகர், தான் பாஜகவில் இணையப்போகிறேன் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும், நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா என்று திட்டவட்டமாக மறுத்ததுடன், தனக்கென தனி அமைப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றதுடன், மக்கள் அழைக்கும்போது அது சக்திவாய்ந்த அமைப்பா இருக்கும் என்றும் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலாக அமையும் என்பதுடன், திமுக, அதிமுகவுக்கு கடும் சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.