சென்னை: விஜய் பாஜகவின் சி டீம் என்றும் அது பிரமாண்டமான சினிமா மாநாடு என்றும் திமுக அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று (அக் 27) அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் உரையாற்றிய விஜய், தமிழக அரசியல் கட்சிகள் முதல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வரை அனைத்து தரப்பினரையும் கடுமையாக சாடினார். விஜயின் பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக திமுகவை கடுமையாக சாடியவர், ‘மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்’ – திமுகவை நேரடியாக விமர்சித்த விஜய், பாசிசம் பாசிசம் என்று மாற்று கட்சியை விமர்சிக்கிறார்கள், அப்படியென்றால் இவர்கள் பாயாசாமா? என்றும் கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் தங்களுக்கு நாத்திகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றவர், இருமொழி கொள்கை, நீட் விலக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவைகளை ஆதரித்தார்.
அவரது பேச்சில், பிளவுவாத சித்தாந்தம் மட்டுமே நமக்கு எதிரியா? ஊழல் மலிந்த கலாச்சாரத்தை ஒழித்தாக வேண்டும். பிளவுவாத சக்திகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஊழலை கண்டுபிடிக்கவே முடியாது. அது கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும். அந்த கபடதாரிகள்தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டுள்ளனர்.யார் ஆட்சிக்கு வரவேண்டும். வரக்கூடாது என்று நம் மக்களுக்கு தெளிவாக தெரியும் .
சாதி அமைதியாக இருக்கும். அதை வைத்து அரசியல் செய்ய முடியாது. மகத்தான அரசியல் மக்களுடன் இருப்பதுதான். சோறு சாப்பிட்டால்தான் பசியாறும். சோறு என்ற சொல்லால் பசியாறாது. புது மொழியாக முடிந்தவர்கள் மீன்பிடித்து வாழட்டும், முடியாதவர்களுக்கு நாம் மீன்பிடித்து கொடுப்போம்.
எங்கள் அரசியல் கொள்கை, நிலைப்பாடு யதார்த்தமாக இருக்க வேண்டும். நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக வரவில்லை. தமிழகத்தை மாற்றும் முதன்மை சக்தியாக வரவேண்டும். ஒரு முடிவோடு வந்துள்ளேன். இனி திரும்பப் போவதில்லை.
இது நாம் எடுத்த முடிவு. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எதிரிகளை அடிபணிய வைக்கும் கூட்டம் அல்ல. ஏ டீம், பி டீம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் நம் வகையறா உள்ளனர்.
நம் எதிரிகளை ஜனநாயக ரீதியில் 2026-ம் ஆண்டு தேர்தலில் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் அணுகுண்டாக விழும்.
யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை அவர்கள் மேல் பூசி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுவிட்டு, பாசிசம் பாசிசம் என்று கூறுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் யார். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்.
எங்கள் கட்சி வண்ணத்தை தவிர வேறு வண்ணத்தை பூச முடியாது. திராவிட மாடல் என கூறி கொள்ளை அடிக்கும் கூட்டம் நம் எதிரி.
திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவதில்லை. மதசார்ப்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிருத்தி செயல்பட உள்ளோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கபோவது பெண்கள். என் தங்கை வித்யா இறந்தபோது ஏற்பட்ட பாதிப்புதான் நீட்டால் அனிதா இறந்தபோது ஏற்பட்டது. என் அரசியல் குறிக்கோள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். இதை கொடுக்க முடியாத அரசு இருந்தால் என்ன போனால் என்ன?
இதைத்தொடர்ந்து, விஜய் பேச்சுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசியுள்ளார். அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை.
அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தியுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.