அரசியல் குறித்து படிக்க அயல்நாட்டுக்குச் சென்றுள்ள அண்ணாமலையை நையாண்டி செய்து சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் செல்லூர் ராஜீ பகிர்ந்துள்ளார்.
ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பிற்காக நேற்று இங்கிலாந்து சென்றார் அண்ணாமலை.
ஐ.பி.எஸ். முடித்து கர்நாடக காவல்துறையில் பணியாற்றி வந்த அண்ணாமலை தனது பணியை செய்ய மனமில்லாமல் அரசியலில் இறங்கினார்.
பாஜக-வில் சேர்ந்து தனது அரசியலை தொடர்ந்த இவரை தமிழ்நாடு மாநில தலைவராக்கி அழகு பார்த்தது தேசிய தலைமை.
அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் கோவை நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் பாஜக வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்த நிலையில் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை என்று இவர் மீது வெளிப்படையான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அடுத்து இவரது மாநில தலைவர் பொறுப்பு கேள்விக்குறியானது.
இந்த நிலையில் இவருக்கு சர்வதேச அரசியல் குறித்த பயிற்சிக்கு சிறப்பு அழைப்பு வந்ததை அடுத்து மூன்று மாத படிப்பிற்காக நேற்று இங்கிலாந்து சென்றுள்ளார் அண்ணாமலை.
https://x.com/SellurKRajuoffl/status/1829089247745192330
அண்ணாமலை இதுவரை அரசியலில் செய்தவற்றை மனதில் வைத்து அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் எப்படி பாடம் படிப்பார் என்பதை விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை குறித்த ஒரு வீடியோவை பகிர்ந்து தனது பங்கிற்கு நையாண்டி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.