பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியின் போன் பிஸியாக இருந்ததை அடுத்து காதலியின் ஊருக்குச் செல்லும் மின்சார ஒயரை துண்டித்ததாக காணொளியுடன் ஒரு செய்தி வெளியானது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபல ஊடகங்களும் கடந்த ஒரு வாரமாக இதை வெளியிட்டு வந்தது.

ஆனால் இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் இந்த தகவலில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கையில் மின்சார ஊழியர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் வைத்திருந்ததாகக் காரணங்களைப் பதிவிட்டனர்.
தவிர, பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தின் கணேசபுரா கிராமத்தில் 2022ம் ஆண்டு காதலியை சந்திக்க இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து பஞ்சாயத்தில் சிக்கிய இளைஞர் தொடர்பான காணொளி தான் இது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியா டுடே உண்மை சரிபார்ப்பு குழு நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடைபெற்றது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் கதை முற்றிலும் போலியானது என்றும் காணொளியில் காணப்படும் இளைஞர் அன்வர் ஹுசைன் என்ற லைன்மேன் என்பதையும் விசாரித்து தெரிவித்துள்ளது.
மின் ஊழியரான அன்வர் ஹுசைன் அசாமின் பக்ஸாவின் நிகாஷி கிராமத்தில் பழைய மின்சார கம்பிகளை அகற்றி புதியவற்றைப் பதித்துக்கொண்டிருந்த வீடியோ கடந்த ஒரு வாரகாலமாக இந்தியா முழுவதும் வைரலானதில் இதை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது.