பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் மைசூரு&தலச்சேரிக்கு குடகு மாவட்டம் வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து குடகு மாவட்ட மக்கள், சமூக நல ஆர்வலர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2017ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் இதன் முதற்கட்ட போராட்டம் தொடங்கியது. 2வது போராட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி நடந்தது. 3வது போராட்டம் கடந்த மாதம் பிரதமர் மோடி வருகையின் போது ஆயிரகணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் குடகு எகிகர்னா ரங்கா மற்றும் வன உயிரின முதலாவது அறக்கட்டளை நிர்வாகி சின்னப்பா, முன்னாள் தேசிய வன உயிரின வாரிய உறுப்பினர் பிரவீன் பார்கவ் மற்றும் பிரசாத் ஆகியோர் கடந்த 5ம் தேதி ரெயில்வே அமைச்சரை சந்தித்து குடகு மாவட்டம் வழியாக ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

இதைதொடர்ந்து கடந்த 7ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு ரெயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகெய்ன் பதில் கூறுகையில், ‘‘தலைசேரி&மைசூரு இடையே புதிய ரெயில்வே பாதை அமைக்கும் திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை’’ என்றார்.

இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.