டில்லி
ராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ராஜ்யசபை அலுவலகத்தில் தீடீர் சோதனை செய்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜ்யசபைத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவர் ராஜ்யசபை அலுவலகத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள பணியாளர்களின் வருகைப் பதிவேடு, அலுவலகத்தின் சுகாதாரம் ஆகியவைகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.
அவர் சோதனையில் ராஜ்யசபை அலுவலகப்பணியாளர்கள் பலர் வராதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். அதை ஒட்டி அவர் அனைவருக்கும் ரேகை வருகைப் பதிவேடு கருவி அமைக்க உத்தரவிட்டார். மேலும் அவர் ராஜ்யசபை நடக்கும் போது பணியாளர்களுக்கு அதிகமான வேலைச் சுமை உள்ளதை தாம் அறிவதாகவும், அதற்காக இவ்வாறு பணிக்கு வராமல் இருப்பது தவரு எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அலுவலகத்தில் பல இடங்களில் சரியாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதை கண்ட அவர் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து பணியாளர்களிடம் எடுத்துரைத்தார். அத்துடன் துப்புரவுப் பணியாளர்கள் முழுமையாக சுத்தம் செய்வதை கண்காணிபது மற்ற ஊழியர்களின் பொறுப்பு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.