அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குறிய இடத்தை அரசு தன்வசப்படுத்திக்கொண்டு, அறக்கட்டளை ஒன்றை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்தி ராமர் கோவில் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, மசூதி கட்ட அதே பகுதியில் 5 ஏக்கருக்கு மாற்று இடம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு தேவையான சிற்பங்கள் அடங்கிய தூண்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியை விஷ்வ இந்து பரிக்ஷத் அமைப்பு கடந்த 1990 முதல் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை 60 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், கோவில் கட்டுமானம் தொடர்பான அமைப்பையும் அந்த அமைப்பு ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.

விஷ்வ இந்து பரிக்ஷத் அமைப்பின் வடிவமைப்புகள் படி, கோவிலின் உயரம் 128 அடியாகவும், அகலம் 140 அடியாகவும், நீளம் 270 அடியாகவும் இருக்கும். மொத்தம் 212 கற்தூண்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டு, தற்போது வரை 106 தூண்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் இவற்றை தயாரித்து வந்த சிற்பக் கலைஞர் ரஜினிகாந்த் சோம்புரா உயிரிழிந்த நிலையில், உச்சநீமன்றம் தீர்ப்பு வழங்கும் பணியை விரைவுப்படுத்தியதால் மாற்று கலைஞர் நியமிக்கப்படாமல், பணி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மற்ற ஊழியர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

தற்போது ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான பணிகளில் மீண்டும் விஷ்வ இந்து பரிக்ஷத் அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் உடன் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராம நவமியின் போது, கோவிலுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராமர் கோயில் பணிமனை கண்காணிப்பாளர் அன்னுபாய் சோம்புரா, “உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வெளியாகியுள்ள நிலையில், கட்டுமான பணிகள் இனி வேகமெடுக்கும். பணிகள் தொடங்கினால், குறைந்தபட்சம் 250 சிற்பக் கலைஞர்கள் தேவைப்படுவார்கள். கோவிலை கட்டி முடிக்க அதிகபட்சம் 5 ஆண்டுகளாவது ஆகும். 1984ம் ஆண்டு ராமர் கோவிலுக்கு அடித்தளம் அமைக்கும் பூஜை நடைபெற்றது. கோவில் கட்டுவதற்காக பக்தர்களிடம் இருந்து நபருக்கு தலா ரூ.1.25 காசுகள் நன்கொடையாக பெறப்பட்டது. இதுவரை அந்த வகையில் ரூ. 8 கோடி வரை வசூலாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக புதிய மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட படி அறக்கட்டளை அமைப்பதற்கான விதி முறைகள் இடம்பெறும் என்று தெரிகிறது. அந்த விதிமுறைகளின் படி, அடுத்த 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை நிறுவப்படும். அதன் பின், அதில் இடம்பெறும் உறுப்பினர்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

சோமநாதர் கோவில் அறக்கட்டளை போல, மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் புதிதாக அறக்கட்டளை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சோமநாதர் கோவில் அறக்கட்டளையில் ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ள நிலையில், ராமர் கோவில் அறக்கட்டளையிலும் அவர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. அதேநேரம், விஷ்வ இந்து பரிக்ஷத் அமைப்பை சேர்ந்த ஒருவர், அத்வானி அல்லது உமா பாரதி, கோவில் தலைமை அர்ச்சகர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை சேர்ந்த ஒருவர் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் 7 பேர் கொண்ட அறக்கட்டளையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறக்கட்டளையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இடம்பெறும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெறியாகியுள்ளது.