ஆக்ரா:

ஆக்ராவில் விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டு விஜயதசமி விழாவை கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பாரம்பரியம் மிக்க ஆக்ரா கோட்டை அருகே ரமிலா மைதானத்தில் உள்ள ஹனுமன் மந்திர் ப குதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஹெச்பி தலைவர் சுனில் பரசார் கூறுகையில், ‘‘ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் கோவில் வளாகத்தில் தான் கொண்டாடினர். இது ஆக்ரா கோட்டையில் இருந்து தொலைவில் அமைந்துள்ளது’’ என்றார்.

கோவில் வளாகத்தில் இருந்த தன்னார்வலர்கள் நடத்திய இந்த சம்பவத்தால் துப்பாக்கி வெடித்த சத்தம் பயங்கரமாக வெளியில் கேட்டுள்ளது. துப்பாக்கி, கை துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்ளோடு சிறுபான்மை சமுதாய மக்களை மிரட்டும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இது குறித்து ராகாபகஞ் காவல் நிலைய அதிகாரி சஞ்சீவ் தோமர் கூறுகையில், ‘‘ஹனுமன் கோவில் உள்ளே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. கோவில் உள்ளே நடந்த இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளி க்கவில்லை’’ என்றார்.