சென்னை:
தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.
இன்று சிறப்பு மற்றும் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வும், நாளை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு கால்நடை மருத்துவ கல்லூரியில் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் – கால்நடை பரா மரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்ட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது.
முதல்நாளான இன்று கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் படிப்பில் மாற்றுத்தி றனாளிகள், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ஆகியப் பிரிவினருக்கும், பிற்பகல் பிளஸ் 2 தொழில்கல்வி பயின்றவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நிகழாண்டில் 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை 10 -இலிருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டுப் பிரிவினருக்கு 5 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்கள், தொழில் பிரிவு மாணவர்களுக்கு 5 சதவீதம் இடம் என்ற முறையில் 16 இடங்கள் என மொத்தம் 39 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை முதல் கால்நடை மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 21 -ம் தேதி கால்நடை தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு கலந்தாய்வு நடைபெறும்.