டெல்லி: பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானிக்கு நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் 96 வயதான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
1980 ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டதில் இருந்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்த அத்வானி தற்போது வயது மூப்பால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்த அத்வானி, தனது 14ஆம் வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இவரது குடும்பம் மும்பையில் குடியேறியது. மேலும் நீண்ட காலம் பாஜகவில் தலைவராக இருந்த அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார்,
வாஜ்பாய் பிரதமராக பணியாற்றிய காலக்கட்டத்தில் துணை பிரதமராக பதவி வகித்தார். அதே அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் அத்வானி பெயர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது. எனினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 6 ரத யாத்திரை நடத்திய அத்வானி தலைமையிலான யாத்திரையில் தான் பாபர் மசூதியானது இடிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷணும், சமீபத்தில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. மேலும் எனது நாடு எனது வாழ்க்கை என்ற பெயரில் 1040 பக்கங்கள் கொண்ட சுயசரிதை எழுதி 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்