புதுடெல்லி: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை காக்கவும், மாநில அரசுகள் சைக்கிள் சவாரியை, மக்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டுமென்றுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

‘‍சைக்கிள் சவாரி’ தொடர்பான ஒரு வீடியோ கருத்தரங்களில் உரையாற்றிய வெங்கய்ய நாயுடு கூறியதாவது, “சவாரிக்கு சவாரி, குறைந்த செலவிலான உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், மாசற்ற சுற்றுச்சூழல் உள்ளிட்ட பலவித நன்மைகள் சைக்கிள் சவாரியில் கிடைக்கும். இளைய சமுதாயத்தினர் அதிகமாக சைக்கிள் சவாரி செய்ய வேண்டும்.

கொரோனா, நம் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. வாகனப் போக்குவரத்து குறைந்து, சைக்கிளில் சவாரி செய்வதும், நடை பயணமும் அதிகரித்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில், போக்குவரத்து வசதியற்ற இடங்களில் பயணிக்க சைக்கிள் முக்கிய வாகனமாக இருக்கிறது.

அதனால், கொள்கைகளை உருவாக்குபவர்களும், நகர்ப்புறங்களை வடிவமைப்போரும், இனிவரும் நாட்களில், சைக்கிள் பயணத்திற்கு, தனியானப் பாதையை உருவாக்க வேண்டும். அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சைக்கிள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டிலும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். இந்தியாவில், குறுகிய துாரப் பயணத்திற்கு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக, சைக்கிளில் பயணம் செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு, ரூ.1.75 லட்சம் கோடி மிச்சமாகும் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது” என்றார் அவர்.

 

[youtube-feed feed=1]