உறவுகள் – கவிதை பகுதி 7

வேங்கை மை

பா. தேவிமயில் குமார்

எப்போது தான்

என்னைத் தேடி

வருவாய் ?

 

எதிர்பார்ப்பில்,

என் காலங்கள்

ஏக்கத்தில்

என் கனவுகள்

என……

கழிகிறது வாழ்க்கை !

 

உன்னை ஏந்திட

என்

கருப்பையும், இரு

கைகளும்

காத்துக்கிடக்கிறது

காலம் காலமாய் !

எதிர்காலம்

என்பது

எனக்கு

எதுவுமில்லை,

உன்னைத் தவிர !

 

காசும் பணமும்

கௌரவமும்,

வீடும்,

வாசலும்,

எதுவுமே

எனக்கு பெரிதாக

தெரியவில்லை !

உன்னைத் தவிர !

 

என்

ஏக்கமும்

துக்கமும்

உன்னைத்

தூக்கிக்கொஞ்சும்

நாளில் தான்

தூரம் போகும் !

 

எங்கோ

ஒரு

குழந்தை அழும்

குரல் கேட்டால்

நான் குலுங்கி அழுவதை

நீ அறிவாயா ?

 

வளைகாப்பிலும்

விழாக்களிலும்

ஒதுங்கி நின்றே

ஓய்ந்து விட்டது

என் மகிழ்ச்சி !

என்பதை அறிவாயா ?

 

குருவியும்

குளவியும்

கூடுகட்டுகிறது

நம் வீட்டில் !

நீ எப்போது

என்

கருப்பையெனும்

கூட்டிற்கு வருவாய் ?

 

ஆண் குழந்தையோ

பெண் குழந்தையோ

நீ என்

குழந்தையென,

குதூகலமாய்

கூற வேண்டும் !

 

உன்னை

என் இடுப்பில்

சுமந்தபடி

சந்தோஷமாய்

இந்த

உலகத்தையே

ஒரு சுற்று வர வேண்டும் !

 

என் வயிற்றை

உன் கால்களால்

உதைத்திடு !

ஒவ்வொரு நாளும்

உன்னை

எனக்குள்

உணர வேண்டும் !

உருக வேண்டும் !

 

வேண்டாத

தெய்வமில்லை,

வேண்டுதலுக்கும்

பஞ்சமில்லை,

வைத்தியமும்

கொஞ்சநஞ்சமல்ல,

பத்தியமிருந்து

பார்த்துவிட்டேன்,

பட்டினி கிடந்தும்

பார்த்துவிட்டேன்,

பழங்கள் உண்டும்

பார்த்து விட்டேன்,

இன்னும் நீ

ஏன் வரவில்லை ?

 

நானும்

உன் அப்பாவும்

இப்போதெல்லாம்

நீ எப்போது

வருவாயென ?

வாழ்க்கையை

ஓட்டிக்கொண்டிருக்கிறோம் !

ஆயிரம்

கவலைகளை

களிப்பாக்கிட

கனவுகளை

நனவாக்கிட

நறு மலரே வந்துவிடு !

 

பிரசவ வலியைவிட

பெரிய வலி

இல்லையாம் !

யார் சொன்னது ?

என்னைப் போல

குழந்தைக்கு ஏங்கும்

அம்மாக்களிடம்

கேட்டுப்பார் !

அதைவிட பெரிய

வலிகளை

வார்த்தைகளிலே

அனுபவித்து

விட்டேன் !

அரைஞாண் கயிறும்,

அழகு ஆடைகளும்,

கொஞ்சும்

கொலுசுகளும்,

வெள்ளெருக்கு

வளையமும்,

வேங்கை மையும் ,

விளையாட்டு பொம்மைகளும்,

உனக்காக

இங்கே காத்திருக்கிறது

வந்து விடு என்

வண்ணக்கிளியே !

 

கனவுக்

குழந்தையாகவே

இருந்து விடாதே ! உன்

கண் பார்த்து,

கை தொட்டு,

உன் உச்சி முகர,

உன் உள்ளங்கை பிடிக்க,

ஒவ்வொரு நாளும்

காத்திருக்கிறேன் !

காலம் கடத்தாதே !

வந்து விடு கண்ணே !

உன் வரவை

வார்த்தையில் அல்ல – என்

வயிற்றில் எதிர்பார்க்கிறேன்

வந்து விடு வண்ணக்கிளியே !

 

– இப்படிக்கு

குழந்தைக்காக ஏங்கும்

ஒரு தாய்