சென்னை

தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார்.

தமிழகத்தில் தொடர் கனமழையால் பல விளை நிலங்களில் நெல் பயிர்கள் மூழ்கி நாசமாகி உள்ளன.  குறிப்பாக டெல்டா பகுதிகளில் ஏராளமான அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி மழையால் பயிர்கள் மூழ்கி கடும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் தள்ளுபடி மற்றும் உதவித் தொகை அளிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

வேல்முருகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.  தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

விவசாயிகள் ஒரு ஏக்கரில் சம்பா, தாளடி பட்டத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளக் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இத்தொகையை பெரும்பாலான விவசாயிகள், வட்டிக்குக் கடன் வாங்கி தான் விவசாயத்தை மேற்கொண்டிருப்பார்கள். இச்சூழலில், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகியிருப்பது, அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாகும்.  ஆகவே அவர்களின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதை புரிந்து கொண்டு, நீரில் மூழ்கிய விளைநிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. “எனத் தெரிவித்துள்ளார்.