ருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது.

நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளைப் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்” என்று பெயர் பெற்றார்.

திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.

இந்த திருத்தலத்தை திரு–என்ற இலக்குமி தேவியும், ஆ–என்ற காமதேனுவும், இனன்–என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது.

இந்த ஐவரும் முருகனைப் பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு “திருவாவினன் குடி” என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
மூன்றாம் படை வீடு: முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே “மூன்றாம் படை வீடு” ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், “திருஆவினன்குடி‘ என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.