திருப்பதி: திருமலைக்கு செல்லும் மலைப்பாதை கனமழையால் சேதமடைந்திருந்த நிலையில், அதை செப்பனிடும் பணி முடிவடைய உள்ளதால், வரும் 10-ந்தேதி முதல் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனத்த மழை பெய்தது. இதனால், சித்தூர், கடப்பா, அனந்தபுரம், நெல்லூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. திருப்பதியிலும் கனமழை பெய்தது. இதனால், திருப்பதியில் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால், பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தன.
இதையடுத்து, திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், அலிபிரியில் தடுத்து நிறுத்தப்பட்டு, அருகே உள்ள இணைப்பு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்வது தொடர்பாக டெல்லி, ஐதராபாத், சென்னையை சேர்ந்த ஐஐடி பேராசிரியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். டிரோன் கேமரா மூலம் மலைப்பாதை பகுதியை ஆய்வு செய்து அதிநவீன தொழில்நுட்பத் துடன் பாதையை சீரமைக்ககும் பணி குறித்து, திருமலைக்கு மேலும் ஒரு பாதை அமைப்பது குறித்து ஆலோசித்தனர்.
அதைத்தொடர்ந்து, மலைப்பாதை சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் ஜனவரி 13ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சீரமைக்கப் பட்ட மலைப்பாதை வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.