டில்லி
வாகன உற்பத்தியாளர்கள் வரப்போகும் விழாக்கால விற்பனை மூலம் தங்கள் சரிவைச் சரிக்கட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக வாகன விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாகக் கடந்த 5 மாதங்களில் பல முகவர்கள் விற்பனை சரிவு காரணமாக தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர். அத்துடன் புதிய வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கிக் கிடப்பதால் நாட்டின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மாருதி, ஹுண்டாய், டொயோட்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இதனால் வாகன உதிரி பாகங்கள் தொழிலும் முழுவதுமாக முடங்கி உள்ளது.
இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி ஆகிய விழாக்கள் அடுத்தடுத்த மாதங்களில் வர உள்ளன. இந்த விழாக்காலங்களில் வாகனம் உள்ளிட்ட பலபொருட்களையும் மக்கள் விரும்பி வாங்குவது வழக்கமாகும். எனவே இந்த விழாக்கால விற்பனையின் மூலம் சமீபத்திய சரிவை சரிக்கட்ட முடியும் என வாகன உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஹோண்டா நிறுவன மூத்த துணைத் தலைவர் ராஜேஷ் கோயல்,”தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் பெரும் மாற்றம் இல்லாத நிலையில் விழாக்கால விற்பனை அமோகமாக நடக்க வாய்ப்பில்லை. ஆயினும் கடந்த 5 மாதங்களாக ஏற்பட்டுள்ள விற்பனைச் சரிவை இந்த விழாக்கால விற்பனை ஓரளவு சரிக்கட்டும் என நம்புகிறோம்.
ஏற்கனவே நமது நாட்டின் தென் பகுதி மற்றும் மேற்குப் பகுதிகளில் விழாக்காலம் தொடங்கி உள்ளது. ஆனால் விற்பனையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் தென்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் தற்போது இந்த பகுதிகளில் பெய்து வரும் கனமழை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இருப்பினும் இந்த விழாக்கால விற்பனை மூலம் சரிவு எந்த அளவு சீராகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை டொயோட்டா நிறுவன நிர்வாக மேலாளர் என் ராஜா மற்றும் மாருதி நிறுவன விற்பனை மேலாளர் ஷஷாங்க் ஸ்ரீவத்சா ஆகியோரும் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது விழாக்காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வாகன விற்பனை குறித்து முன் விசாரணையைத் தொடங்கி உள்ளதால் விற்பனை சரிவு குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.