பெங்களூரு:
பெங்களூருவில் இன்று ஒரே நாளில் 35 தமிழக லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  கன்னட அமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளை தேடித் தேடி தீ வைத்து எரித்தன.
காவிரியில் தமிழகத்துக்கான நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.   வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதிலும் திருத்தம் கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுகின்றன.  நஞ்சன்கூடு பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. பெங்களூரு செயிண்ட்ஜார்ஜ் பகுதி மற்றும் ராம்நகரில் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் தாக்கப்பட்டன. அதேபோல் மாண்டியாவில் தமிழருக்கு சொந்தமான கடைகள் அடித்து உடைக்கப்பட்டன.
பெங்களூரு புறநகர் பகுதியில் மைசூர் சாலையில் தமிழக பதிவெண் கொண்ட இரண்டு லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் இரு லாரிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதேபோல் மேலும் 3 லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. . மைசூர் சாமுண்டி மலையில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
3
இதனால் கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
பெங்களூரு நியூ டிம்பர் லே-அவுட்டில் சரக்கு ஏற்றுவதற்காக வந்திருந்த 25 லாரிகள் மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்டன.  லாரிகளின் டயர்கள் வெடித்து சிதறும் சத்தம் வெடிகுண்டு வெடித்ததை போல கேட்டது. பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று மட்டும் மொத்தமாக சுமார் 35 லாரிகள் எரிக்கப்பட்டன.