சென்னை: நடப்பாண்டில் வீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பி உள்ளது. இது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்றி, வளிமண்டல சுழற்றி போன்ற காரணங்களால், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்,  தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் நீர் நிரைந்து காணப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் பெய்து வந்த மழை காரணமாக, மேட்டூர் அணையும் நடப்பாண்டு 6 முறை நிரம்பியது.

இநத் நிலையில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில்  உள்ள வீராணம் ஏரி நடப்பாண்டு 6வது முறையாக நிரம்பி  உள்ளது.

ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

 இந்த நிலையில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை 5-வது முறையாக செப்டம்பர்  1-ந்தேதி எட்டியது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கீழணையில் இருந்து பல்வேறு ஓடைகள், மதகுகள் வழியாக வீராணம் ஏரிக்கு 470 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் வெயிலின் தாக்கத்தில் ஏரியின் நீர் மட்டம் குறைந்த நிலையில் தற்போது தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி 6-வது முறையாக முழு கொள்ளளவான 47.40 அடியை எட்டியது.

இதையடுத்து,  மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வி.என். எஸ். மதகு மூலம் 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 470 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு 247 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

ஏரியின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.