சென்னை: விசிகவின் மதுஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் நாடகம் என்றும், இது  “திருமாவளவனும் ஸ்டாலினும் போடும் நாடகம்”  என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடுமையாக விமர்சனம் சய்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின்,  அமெரிக்க பயணத்தின் முதலீடு குறித்து சர்ச்சைகள் எழும்பாமல் இருப்பதற்காக திருமாவளவனும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் சேர்ந்து திட்டமிட்டு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

 சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  “தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்தார். 17 நாட்கள் பயணம், பெரிய அளவில் முதலீடு வரும் என எதிர்பார்த்த நிலையில் முதலீடு வந்து சேரவில்லை. அதை மறைப்பதற்காகவே, அமெரிக்காவிலிருந்து புறப்படும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமாவளவன் மற்றும் ஸ்டாலின் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நாடகத்தின் வெளிப்பாடாடே விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாடு,. மதுவிலக்கு வேண்டும் என்பது அனைவரினுடைய கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அதை ஒரு அரசியல் நாடகமாக கடந்த நான்கு  நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் வெளிநாடு  முதலீடுகள் குறித்து  கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும், என்ன முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என தெரியாமல் இருக்க வேண்டும், அது குறித்து சர்ச்சை வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு மதுவிலக்கு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

17 நாட்களாக அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களைச் சந்தித்தார், அவர் சந்தித்த பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள். அதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாட்டிலேயே செய்திருக்கலாம், இதற்காக அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயணம் ஒரு தோல்வி அடைந்த பயணம், அதை மறைப்பதற்கு தான் இந்த மதுவிலக்கு நாடகம்” என்று கடுமையாக விமர்சித்தவர், ஏற்கனவே  மு.க.ஸ்டாலின்  ஸ்பெயின் மற்றும் துபாய் சென்றிருந்தது குறித்து சரியான தகவல் இதுவரை கொடுக்கவில்லை. ஆகவே, அதற்கான வெள்ளை அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார், அதை நாம் யாரும் எதுவும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால், 17 நாட்கள் முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம் என கூறிச் சென்று என்ன முதலீடு வந்திருக்கிறது? என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? என கேள்வி எழுப்புகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என கூறினார்கள். அதற்கு பதிலாக எண்ணிக்கையை உயர்த்தி உள்ளார்கள். அப்பொழுது திருமாவளவன் கூட்டணியில் தான் இருந்தார். அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் தான் இருந்தார். கிராமம் கிராமமாக மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டு வருகிறது என்றவர்,

விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் திமுக கலந்துகொள்வதாக தெரிவித்திருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார். ஏன் மதுவிலக்கு மாநாட்டிற்கு ஏன் ஜெகத்ரட்சகனையோ, டி.ஆர்.பாலுவை அனுப்பவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

“உண்மையிலேயே திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மது ஒழிப்பு கட்டாயம் என்று கூறிவரும் பாஜகவோடு கூட்டணி வைத்து போராட வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களை நம்புவார்கள்.

2026ஆம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து அதிக சீட்டு பெறுவதற்காகவே, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.