சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, விசிகவுக்கு அதிக தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்போதே திமுகவினரிடம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதுடன், மக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதுடன், தேமுதிக, பாமகவுக்கும் வலைவீசி வருகிறது.
இதற்கிடையில், புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது கட்சி, 2026ல் கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் என கூறி வருவதுடன், தனது கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளவர்களுக்கு ஆட்சியில் பங்கு என கூறி ஆசை காட்டி வருகிறார். இதையே சில சிறிய கட்சிகள், தங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூட்டணி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம். வர இருக்கிற தேர்தலில், திமுக தலைமையிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற கூறினார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவும், நாங்கள் அதிக தொகுதிகளை கேட்போம் என்று தனது பங்குக்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறி இருந்த நிலையில், தாங்களும் அதிக தொகுதிகளை கேட்போம் என திருமாவளவன் பேசியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியளார்களிடம் பேசிய திருமா, “ஒவ்வொரு கட்சியும் அப்படித்தானே சிந்திக்க முடியும். குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல வாய்ப்பில்லை. நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் சரி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான். இது வாடிக்கையான ஒன்றுதான் என்றார்.
ஆனால், பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில அவங்க உருவாக்கக்கூடிய குழுவிடம் தான் பேசுவோம். அவங்க அதே மாதிரி எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டிய தேவை இருக்கு. எல்லாருக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கு. அவங்களும் கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனி மெஜாரிட்டியோட வெற்றி பெறும் விருப்பத்தில் இருப்பாங்க. எல்லாத்தையும் கணக்கில் கொண்டு கருத்தில் கொண்டு நாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம்.
திமுக தேர்தல் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆகவே, நானும் சொல்லுகிறேன். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்” என்றார்.
திமுக கூட்டணிக்கு சவாலாக அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, “இதுவரை எந்த சவாலும் ஏற்படும் சூழல் கனியவில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை. அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டியதில்லை. யதார்த்தமான உண்மை. அதற்குதான், அமித்ஷா ஒரு முறைக்கு இருமுறை இங்கு வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார்
பாஜக எதிர்பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. குறிப்பாக, தேமுதிக பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. ஆகவே, அதிமுக பாஜகவை தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதில் நம்மால் முடிவுக்கு வர முடியவில்லை.
இந்த சூழலில் அதிமுக – பாஜக ஆட்சியை கைப்பற்றும். கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டாப் என்று சொல்ல வேண்டி உள்ளது” என்றார்.
ஏற்கனவே திமுக தலைமை கூட்டணி ஆட்சி என்து திமுகவின் வரலாற்றிலே கிடையாது என்று கூறியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகள் தங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும், கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பேசத் தொடங்கி உள்ளன.