சென்னை:

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தனக்கு மிரட்டல் வருவதால், காவல்துறை பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை ஏப்ரல் 1ந்தேதி நடைபெறும் என்று நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில்,  கடலூர் மாவட்டம் சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திருமாவளவன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில், பாதுகாப்பு கேட்டு மனு  தாக்கல் செய்தார். அதில், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தொலைப்பேசி மூலம் தம்மை அடிக்கடி சிலர் மிரட்டுவதாகவும், தமக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தனது மனுவில்  குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஏப்ரல் 1-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

திருமாவளவனின் திடீர் மனு,  அவரது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.