ஜெய்ப்பூர்

முன்னாள் முதல்வர்கள் அரசு இல்லங்களில் தொடர்ந்து வசிக்கலாம் என்னும் அரசு உத்தரவை ராஜஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்த  நேரத்தில் வசுந்தரராஜே முதல்வராகப் பதவியிலிருந்தார்.  அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த மசோதாவின்படி முன்னாள் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு இல்லத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும்  பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.   அத்துடன் முதல்வர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளான, இலவச தொலைப்பேசி, ஓட்டுநர்கள், காரியதரிசிகள், 10 பேர் கொண்ட ஊழியர் குழு, உள்ளிட்டவையும் தொடர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதல்வர்களுக்கு அளிக்கப்படும் இந்த சலுகைகளால் மாநில அரசுக்கு வருடத்துக்கு ரூ.22 லட்சம் வரை செலவாகி வந்தது.   ராஜஸ்தான் மாநில அப்போதைய  முதல்வர் சுந்தர ராஜேவுக்கு அவருக்கு 13, சிவில் லைன்ஸ் என்னும் விலாசத்தில் உள்ள அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்தது.  அவர் அந்த இல்லத்துக்கு அனந்த் விஜய் எனப் பெயர் சூட்டி வசித்து வந்தார்.    அவர் தேர்தலில் தோல்வி அடைந்து பதவி இழந்த பிறகும் அதே இல்லத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார்.

வசுந்தரராஜே அளித்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் நீதிமன்றம், “முந்தைய அரசு கொண்டு வந்த இந்த மசோதாவை நீதிமன்றம் ரத்து செய்கிறது.   அனைத்து மக்களும் சமம் என்னும் நிலையில் முன்னாள் முதல்வர்களுக்கும்  முதல்வர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தொடர்வது சட்ட விரோதமானது” என அறிவித்துள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவுப்படி வசுந்தர ராஜே தனது அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்.   இவரைப் போல் கடந்த 1980-81 ஆம் வருடம் முதல்வராக இருந்து இன்னும் அரசு இல்லத்தில் வசித்து வரும் ஜெகன்னாத் பகாடியாவும் தனது இல்லத்தை காலி செய்ய வேண்டி உள்ளது.