டில்லி

செல்வந்தராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியின் மகன் வருண் காந்தி.    இவரும் இவர் தாய் மேனகா காந்தியும் பாஜக வில் உள்ளனர்.   இவர் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.   இவர் தற்போது மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில்,  “தற்போது நாட்டில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றது.   பொருளாதார சமத்துவமின்மை நிகழ்கிறது.  இந்த நிலையில் வசதி உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.   அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய ஊதியமான ரூ. 2.7 லட்சத்தை மேலும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.   உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஊதியத்தை உயர்த்திக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.   தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்களின் ஊதியமும் உயர்த்தப் பட்டுள்ளது.    இதனால் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும்.

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பும் பன் மடங்கு உயர்ந்துள்ளது.    ஒவ்வொரு உறுப்பினருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன.  சராசரியாக ஒரு உறுப்பினருக்கு ரூ.14.61 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது.  எனவே இவ்வளவு செல்வந்தராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஊதியத்தை நாட்டு நலனுக்காக விட்டுத் தர முன் வர வேண்டும்.”  என வருண் காந்தி தெரிவித்துள்ளார்.