லக்னோ
நேருவால் தான் பாகிஸ்தான் பிரிவினை நடந்தது என மோடி தெரிவித்ததற்கு பாஜக எம் பி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேருதான் என கூறி உள்ளார். அவருடைய இந்தப் பேச்சுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் பேசி உள்ளார்.
நேற்று லக்னோ வந்திருந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் நேருவின் கொள்ளுப் பேரனுமான வருண் காந்தி இளைஞர் அமைப்பு ஒன்றின் நிகழ்வில் உரையாற்றினார். அவர் தனது உரையில், “மக்களில் சிலர் நேரு இந்நாட்டின் முதல் பிரதமர் ஆகி செழிப்பாக வாழ்ந்ததாக நினைக்கின்றனர். ஆனால் அவருடைய வாழ்க்கையில் இந்நாட்டின் விடுதலைக்காக பதினைந்தரை வருடம் சிறையில் கழித்தவர் நேரு. நாட்டுக்காக போராடிய சிறந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.
தற்போதைய நிலையில் என்னிடம் ஒருவர் வந்து என்னை 15 வருடங்கள் சிறையில் அடைத்து விட்டு அதன் பின்பு பிரதமர் ஆக்குவதக சொன்னால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அவரிடம், சகோதரா, என்னை மன்னித்து விடு, 15 வருடங்கள் சிறையில் இருந்தால் நான் இறந்து விடுவேன் எனக் கூறுவேன். இளைஞர்களாகிய நாம் நேரு தனது வாழ்க்கை, குடும்பம் மற்றும் செல்வ வாழ்க்கையை தியாகம் செய்ததை நினைவு கொள்ள வேண்டும். இந்த நாட்டின் விடுதலைக்காக அவர் தன் உடலில் தாங்கிய காயங்களை நாடு மறக்கக் கூடாது என காந்தி தெரிவித்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.