டில்லி,
தகுதியில்லாத, செயலற்ற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை திரும்ப பெறும் வகையில் ‘தனி நபர் மசோதா’ கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாஜ.வை சேர்ந்த வருண்காந்தி கூறினார்.
தற்போதைய சூழலில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்கள், வெற்றி பெற்றவுடன் தங்கள் தொகுதியையே மறந்துவிடுகிறார்கள். தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் எதையும் அமல்படுத்துவது இல்லை. தங்களின் சொந்த வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு செயலாற்றுகிறார்கள்.
அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய சட்ட மசோதா கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களின் செயல்திறனை இரண்டு ஆண்டுக்குள் நிரூபிக்க வேண்டும். அந்த காலக்கட்டத்திற்கள் அவர்களின் செயல்திறன் திருப்தி இல்லை என்று அவர் தேர்வு செய்யப்பட்ட தொகுதி மக்கள் கருதினால், அவர்களை திரும்ப பெறும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் சக்தி இருப்பதுபோல், அவர்கள் கடமையை செய்ய தவறும்போது, அவர்களை நீக்கும் சக்தியும் மக்களுக்கு வேண்டும் என்றும், அது இந்த தனி நபர் மசோதாவில் உள்ளது என்றும் வருண்காந்தி கூறினார்.
தனி நபர் மசோதாவில் கூறப்பட்டுள்ள ஷரத்துக்கள்:
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை பற்றி உலக நாடுகளின் கருத்தை கேட்டறிந்த தாகவும், அதைத்தொடர்ந்து 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, இந்த தனி நபர் மசோதா சட்டமுன் வடிவு 2016ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாபடி, செயலாற்றாத எம்பி., எம்எல்ஏக்களை, அவர்களின் பதவியில் இருந்து திரும்ப அழைக்க முடியும். இதன் காரணமாக அவர்கள் பதவி இழப்பார்கள்.
தொகுதியின் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கையெழுதிட்டு சட்டமன்ற சபாநாயகருக்கு மனு கொடுக்க வேண்டும்.
சபாநாயகர் அந்த மனுவில் உள்ள ஷரத்துக்களை உறுதி செய்தும், அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி நம்பகத்தன்மையை கோர வேண்டும்.
தேர்தல் ஆணையம், அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்களை சரி பார்க்கும்.
தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெற வசதியாக, அந்த தொகுதியில் 10 இடங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதி செய்து தர வேண்டும்.
இந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் வாக்குகள், நான்கில் மூன்று பகுதி வாக்குகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக இருந்தால், அந்த தொகுதி சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களை திரும்ப அழைக்கப்படு வார்கள். அவர்களது பதவி திரும்ப பெறப்படும்.
இது குறித்த அறிவிப்பை 24 மணி நேரத்திற்குள் பொதுமக்களுக்கு சபாநாயகர் அறிவிக்க வேண்டும்.
பின்னர் தேர்தல் ஆணையம் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யலாம்.
மீண்டும் “ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற்றால், மக்கள் நம்பிக்கை பெற்ற பிரததி நிதிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அதிக நாட்கள் உல்லாசமாக இருக்க முடியாது. காரணம் மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் உரிமை மக்களுக்கு இருப்பது அவர்களுக்கு தெரியும்.
இதுவே ஜனநாயகத்தின் உண்மையான யோசனை என்றும், இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
ஆனால், தற்போள்ள நிலை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சந்தோஷமாக இல்லையென்றால் வாக்காளர்களுக்கு ஏதும் செய்வது இல்லை. இந்த நிலையே நாடு முழுவதும் உள்ளது.
ஏற்கனவே உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி, பிரதிநிதிகளின் குற்றங்கள், திறமையின்மை, வாக்களர் அதிருப்தி போன்றவற்றை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தனிநபர் சட்ட மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக எம்எல்ஏக்களின் செயலற்ற தன்மை காரணமாக, தமிழகம் முழுவதும் விரக்தியில் உள்ள மக்கள் அவர்களை உடனே திரும்ப அழைக்க முன்வருவார்கள் என்பதில் எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை.
பல இடங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை திரும்ப அழைக்க முடியும்.
இதன் காரணமாக பெரும்பாலான தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மீண்டும் தேர்தல் நடைபெறக்கூடிய ஒரு சூழ்நிலையும், அதன் காரணமாக ஆட்சி மாற்றமும் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.