வரலாற்றில் சில திருத்தங்கள்:  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா?- 

அத்தியாயம் -3                                                                             இரா. மன்னர் மன்னன்

பெண்களின் நாற்பண்புகளாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – ஆகியவை தமிழ் நூல்களிலே கூறப்படுகின்றன. ’இவை ஒரு பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் முழுமை அடைகிறாள்’ -என்ற கூற்று தமிழ் கூறும் நல்லுலகில் நெடுங்காலமாக வழங்கி வரு கின்றது. மக்களும் இந்தக் கூற்றை ’பெண்மை யின் இலக்கணம்’ என்று காலம்காலமாகப் போற்றிவருகின்றனர். இந்த வரையறை எங்கிருந்து வந்தது என்று கேட்டால் தமிழ் அறிஞர்கள் தொல்காப்பியத்தைக் கைக்காட்டு கின்றனர். ’தொல்காப்பியரே சொல்லிவிட்டாரா, சரிதான்’ – என்று இதை ஏற்கவும் நம்மால் முடியவில்லை. அதற்குக் காரணம் தமிழ் அறிந்த கவிஞர்களான பாரதியும் பாரதிதாசனும் எழுதிய எழுத்துக்கள்.

பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியிலே

‘அச்சம் தவிர்’ என்று எழுதுகிறார். இது ஆண்களுக்கு மட்டுமான வரையறையோ என்று நாம் கருதும் போது,

‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று இன்னொரு இடத்திலே பாரதியார் கர்ச்சனை செய்கிறார். பாரதியின் வழிவந்த பாரதிதாசனோ

‘’அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ – என்று எழுதுகிறார். இந்த இடத்திலே நாம் பழைய வரையறையின் பரம்பரையை ஆராய வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

நால்வகைக் குணங்களில் நான்காவது குணமாகக் கூறப்படும் ‘பயிர்ப்பு’ – என்ற சொல் நமக்குப் புதியதாக உள்ளதால் இதன் அர்த்தத்தை முதலில் தேடுவோம். இப்போது புழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்லுக்கான அர்த்தம் பல தமிழ் அகராதிகளில் காணப்படுகின்றது. மதுரை தமிழ் பேரகராதி, கழகத் தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, தமிழ் அகராதி – ஆகிய 4 அகராதிகளிலும் ஒன்றுபோல இச்சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம் ‘அருவருப்பு’. சில அகராதிகள் பயிர்ப்பு என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக ‘குற்சிதம்’ என்ற சொல்லைக் காட்டுகின்றன. குற்சிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் பார்க்கப்போனால் மதுரைத் தமிழ்ப் பேரகராதியின்படி அதுவும் ‘அருவருப்பு’ என்பதாகவே உள்ளது. பெண்களுக்கு ஏன் அருவருப்பு தேவை? குழப்புகிறது அல்லவா?

அடுத்ததாக இந்த வரையறை தொல்காப்பி யத்தில் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் அச்சமும் பெண்பாற் குரிய என்ப’ – இது தான் தொல்காப்பியம் காட்டும் வரையறை. முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது இதில் ‘பயிர்ப்பு’ என்ற ஒன்று கூறப்பட வில்லை. தொல்காப்பியர் வரையறுத்தது 3 குணங்களை மட்டும்தான். பயிர்ப்பு பிற்காலத்தில் வந்த பிற்சேர்க்கை. இதனை சேர்த்த புண்ணியவான் யார் என்று இன்றும் தெரியவில்லை. ஆனால் அப்படிச் சேர்த்தவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தெளிவு கூட இந்த வரையறையைப் பயன்படுத்தும் நமக்கு இல்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.

எந்த நூலின் ஒரு பகுதியை நாம் மேற்கோளாகப் பயன்படுத்தினாலும் அது அந்தநூலின் எந்தப்பகுதியில் வருவது என்பதை அறிந்து மேற்கோள் காட்டுவது அவசியம். உதாரணமாக திருக்குறளில் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரம் மட்டும் 2 முறை வருகின்றது. அதில் ஒன்று பொருட்பாலில் அமைச்சியலில் வருகின்றது. மற்றொன்று இன்பத்துப்பாலில் களவியலில் வருகின்றது. முதலாவது குறிப்பறிதல் அதிகாரம் ‘அமைச்சு செய்யும் பண்புடைய ஒருவன் பிறரது குறிப்பை எவ்வாறு அவன் வாயால் உரைக்கும் முன்பே அறிய வேண்டும்’ என்பதை விளக்குவது. இரண்டாவது குறிப்பறிதல் அதிகாரம் ‘ஒரு தலைவன் தன் தலைவியின் குறிப்பை உணர்ந்து அவள் காதலை அறிவது’ என்பதை விளக்குவது. இந்த இரண்டு அதிகாரங்களும் பெயரால் ஒன்றுபட்டாலும் பொருளால் முழுவதும் வேறுபட்டு நிற்பவை. இதனால் ஒரு நூலின் ‘இயல்’ என்பது அந்த நூல் எதுகுறித்துப் பேசுகின்றது என்பதை அறிய இன்றியமையாதது. ஒரு கறிக்கடைக்காரரை அவரது கடையில் வைத்து ’மூளை இருக்கா?’ – என்று கேட்பதற்கும், சாலையில் வைத்து ‘மூளை இருக்கா?’ – என்று கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதன் விளைவுகளும் வேறு. எனவே சொற்களின் அர்த்தம் இடத்தைப் பொருத்து வேறுபடக்கூடியது.

தொல்காப்பியத்திலே மேற்கூறிய வரையறையானது அதன் ‘களவியல்’ பகுதியிலே 96ஆவது வரியில் இருந்து துவங்கக்கூடியதாக உள்ளது. ’மனது ஒருமித்த காதலர்கள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே பிறர் அறியாமல் தனி இடத்தில் கூடி இன்பமாக இருப்பது’ – என்ற நிலையே களவியல் ஆகும். அப்படி அவர்கள் கூடும் இடத்திற்கு ‘குறி’ என்ற பெயர் சங்க இலக்கியங்களிலே காணப்படுகிறது. பகலில் கூடும் இடம் பகற்குறி, இரவில் கூடும் இடம் இரவுக்குறி.

தலைவியானவள் தலைவனுடன் தனியே இருக்கும் போது அவளுக்கு மனதின் உள்ளே உருவாகக் கூடிய

அச்சம் (பிறர் பார்த்தால் என்ன ஆகும் என்ற மனநடுக்கம்),

மடம் (என்ன ஆனாலும் சரி என்று தலைவனின் ஆசைக்குத் துணை நிற்கும் அறிவற்றதனம்),

நாணம் (தலைவனை அனுமதித்த பின்னர் அவனது செயல்களால் வரும் வெட்கம்) – ஆகியவற்றையே தொல்காப்பியர் ‘அச்சம், மடம், நாணம்’ என்று மூன்றாக வகுத்தார். சங்ககால இலக்கியங்களிலும் இதுவே களவின் நிலைகளாகப் பாடப்பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழ்ச்சமுதாயம் பல மாற்றங்களை சந்தித்தபின்னர், பிற்காலத்தில் தமிழரின் காதல் சுதந்திரத்தை ஏற்க முடியாத ஒருவர், ‘திருமணத்திற்கு முன்பாக ஒருவன் தன்னைத் தொடும்போது பெண் அதனை அனுமதிப்பது எப்படி சரியாக இருக்கும்? அவள் அவனது தொடுகையை அருவருப்பாக அல்லவோ பார்க்க வேண்டும்?’ – என்று எண்ணிப் பின்னாளில் சேர்த்ததே ‘பயிர்ப்பு’.

எனவே இந்த 4 பண்புகளும் பெண்களுக்கு எப்போதும் உரியவை என்பது ஒருபோதும் ஏற்கத்தக்கது அல்ல. இவற்றில் 3 பண்புகள் தேவையான காலத்தில் மட்டும் தோன்றக் கூடியவை. இரு பாலுக்கும் பொதுவானவை.

அச்சத்தைப் பற்றிப் பார்க்கும் போது

‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ – என்று திருவள்ளுவர் கூறுகிறார் அச்சப்பட வேண்டிய வற்றுக்கு அச்சப்படாமல் இருப்பது முட்டாள்தனம் –என்பது இதன் அர்த்தம். எவற்றுக்கு எல்லாம் அச்சப்பட வேண்டும் என்று நாம் பார்க்கும்போது ‘ஒன்பான் சுவை’களுள் அச்சத்தை ஒன்றாக வைத்த தொல்காப்பியர் பெண்கள், விலங்கு, கள்வர், அரசன் – ஆகியவற்றைக் கண்டு அச்சப்படு என்கிறார். பெண்களைக் கண்டு அச்சப்படு – என்ற கட்டளை இங்கே ஆண்களுக்கே வழங்கப்பட்டி ருக்கின்றது. எனவே உரிய இடத்தில் ஆண்களுக்கும் தேவையான பண்பே அச்சம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டாவதாக உள்ளது மடம். இது எப்போதும் இழிவுக்கு உரியது இல்லை. உயர்ந்த செயல்களில் உள்ள மடமை கூட போற்றத்தக்கதே. உதாரணமாக ‘யாருக்குக் கொடுக்கிறோம்?, எதற்குக் கொடுக்கிறோம்?’ என்ற எண்ணமே இல்லாமல் அனைவருக்கும் வாரிக் கொடுப்பதற்கு சங்க இலக்கியத்தில் ‘கொடைமடம்’ என்பது பெயர். புறநானுற்றில் பேகனைப் பரணர்

உறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்

உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி போலக்,

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது,

படைமடம் படான் பிறர் படைமயக் குரினே –என்று பாடுகிறார்.

’வயலிலே பொழிகிறோமா? எதுவுமே முளைக்காத உவர் நிலத்தில் பொழிகிறோமா? –என்று மழைக்குத் தெரியாதது போல, இருப்போருக்குக் கொடுக்கிறோமா? இல்லாதோருக்குக் கொடுக்கிறோமா? –என்று பேகனுக்குத் தெரியாது, அத்தகைய மடமை (கொடைமடம்) பேகனுக்கு உண்டு, ஆனால் போரில் அவனுக்கு மடமையே கிடையாது’ என்பது இதன் பொருள்.

மூன்றாவதாக உள்ள நாணத்தை எடுத்துக் கொண்டால், வள்ளுவர் தனது ‘நாணுடைமை’ என்ற அதிகாரத்திலே நாணத்தை இரு பாலுக்கும் பொதுவாகவே வைத்துப் பாடி உள்ளார். ஆண்களுக்கு நாணம் வருவதற்கும் பெண்களுக்கு நாணம் வருவதற்கும் காரணங்கள்தான் வேறு. இந்த அதிகாரத்திலும் நாணம் பெண்களுக்குக்கே உரிய பண்பாக எங்கும் கூறப்படவில்லை.

நாணங்களில் எல்லாம் சிறந்த நாணம் எது என்று விளக்க முயலும் ஒரு நாலடியார் பாடல்,

நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்

அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; – எச்சத்தின்

மெல்லிய ராகித்தம் மேயாயார் செய்தது

சொல்லாது இருப்பது நாண் (நாலடியார் 299) –என்கிறது.

‘நம்மிடம் ஒன்று கேட்டு வருபவர்க்கு கொடாமல் இருப்பது நாணத்திற்கு உரியது, தீயனவற்றைச் செய்வதும் நாணத்திற்கு உரியது, இவற்றில் எல்லாம் சிறந்த நாணம் நம்மை எளியவராக எண்ணி, செல்வத்தால் பெருமை உடையவர் செய்யும் அவமரியாதையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே!” –என்பது இதன் பொருள்.

எனவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கே உரித்தான பண்புகளோ, பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பண்புகளோ அல்ல. எனவே இவை ஒருபோதும் பெண்மை குணங்களுக்கான வரையறைகள் கிடையாது.