அறிமுகம்
மிழின் இலக்கிய, இலக்கண அழகுகளைச் சுவையாகப் பேசும் தொடர் இது. பல நூற்றாண்டுகளாக நம் பாவலர்களும் பாமரர்களும் போற்றிவளர்த்த மொழியை ருசித்து அனுபவிப்போம்.
மொழிதொடர்பான உங்கள் கேள்விகள், சந்தேகங்களையும் அனுப்பிவையுங்கள். சேர்ந்து படிப்பதே தமிழுக்கழகு!
download
அகரத்தில் தொடங்குவது திருக்குறள். அதுவும் வெறுமனே ‘அ’ என்கிற எழுத்தில்மட்டும் தொடங்கவில்லை, ‘அ’ என்கிற எழுத்தையே சுட்டித் தொடங்குகிறது:
அகர முதல எழுத்தெல்லாம். ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துகளெல்லாம் அகரத்தில், அதாவது ‘ஆனா’வில் தொடங்குகின்றன. அதுபோல, உலகம் இறைவனில் தொடங்குகிறது.
இதில் ‘அகரம்’ என்பது ‘அ’ என்கிற உயிரெழுத்து, ‘முதல’ என்பது என்ன?
‘அகரம் முதலான எழுத்தெல்லாம்’ என்றால் அர்த்தம் புரிகிறது. திருவள்ளுவர் ஏன் ‘முதல’ என்று எழுதவேண்டும்?
ஆனால், ‘அகரம் முதலான எழுத்தெல்லாம்’ என்ற வாக்கியம் இன்னும் முழுமையடையவில்லையே. ‘அகரம் முதலான எழுத்தெல்லாம் அழகியவை’, ‘அகரம் முதலான எழுத்தெல்லாம் இனியவை’, ‘அகரம் முதலான எழுத்தெல்லாம் எழுதினேன்’ என்று இன்னும் ஒரு சொல்லோ சில சொற்களோ சேர்த்தால்தான் இவ்வாக்கியம் முழுமையடையும்.
ஆனால், ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது அப்படியல்ல, அது ஒரு முழுமையான வாக்கியம். அதற்காகதான் ‘முதல’ என்று எழுதுகிறார் வள்ளுவர்.
‘முதல’ என்பது முதல்+அ என்று பிரியும். முதலானவை என்று பொருள். அதாவது, எழுத்துகளெல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன. வாக்கியம் முழுமையடைந்துவிட்டது.
இங்கே ‘அ’ என்பதைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று என்பார்கள்.
பன்மை புரிகிறது, அதென்ன படர்க்கை, வினைமுற்று?
(வெள்ளி தோறும் சந்திப்போம்…!)