டில்லி

வெளி நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களைத் தாய்நாடு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தில் விமானக் கட்டணம் மிக அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுக்குள் கொண்டு வர மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் சர்வதேச விமானச் சேவை ரத்து செய்யப்பட்டன.  இந்தியாவில் இருந்து, பணி, சுற்றுலா, மருத்துவ நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றோர் தாயகத்துக்குத் திரும்பி வர இயலாத நிலை ஏற்பட்டது.    ஊரடங்கின் நான்காம் கட்டத்தில் இதற்காக வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.  இவ்வாறு சிக்கி உள்ள இந்தியர்கள் தூதரகங்களில் பதிவு செய்து தங்கள் முறைக்காகக் காத்திருக்க வேண்டி உள்ளது.   அத்துடன் விமானத்தினுள் முகக் கவசம் அணிந்திருந்தாலும் தொற்று குறித்த அபாயத்துடன் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

ஆனால் இவை அனைத்தையும் விட மக்களை அதிகம் துன்புறுத்துவது  இந்த விமானங்களின் மிக மிக அதிகமான கட்டணங்கள் ஆகும்.    இந்த விமான சேவை சிறப்பு விமானங்கள் என்னும் பெயரில் இயங்குவதால் இந்த விமானத்தில் ஒரு வழி கட்டணம் சென்று விட்டுத் திரும்பும் கட்டணத்துக்குச் சமமாக உள்ளதாக வெளி நாடு வாழ் இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவந்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும்  பெண் ”நான் கடந்த 23 ஆம் தேதி அன்று வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் பிரிட்டனில் இருந்து டில்லிக்குப் பயணம்  செய்தேன்.   இதற்கான டிக்கட் ரூ.55000 வசூலிக்கப்பட்டது.  இது பொதுவாக நான் சென்று விட்டுத் திரும்ப வழக்கமாக கடைசி நிமிட பதிவில் செலுத்தும் கட்டணம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

சிவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மே மாதம் கனடாவில் இருந்து இந்தியா வர தனது குடும்பத்தினருக்காக ஒருவருக்கு ரூ.42000 கட்டணத்தில் மூன்று டிக்கட்டுகள் எடுத்திருந்தார்.   இந்த ஊரடங்கு காரணமாக அந்த டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டன.  அவர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணம் செய்ய அவரிடம் ஒருவருக்கு ரூ1,38,000 என்னும் கணக்கில் மூவருக்கு ரூ4,14,000 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் செவிலியராகப் பணி புரியும் ஒரு பெண் மே மாதம் 19 ஆம் தேதி அன்று கேரளாவுக்கு வந்தே பாரத் திட்ட விமானத்தில் வந்துள்ளார்.  அவரிடம் ரூ.17000 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.  வழக்கமாக அவருடைய மருத்துவமனை நிர்வாகம் கட்டணத்தை அளிக்கும்.   ஆனால் தற்போதைய கட்டணம் இருமடங்குக்கும் அதிகமாக உள்ளதால் கட்டணம் அளிக்கவில்லை.  இந்த செவிலியர் அவரே தனது கட்டணத்தைச் செலுத்தி உள்ளார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த பல பயணிகள் இதே புகாரைத் தெரிவித்துள்ளனர்.    இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் வசதி குறைவானவர்கள் என்பதால் இது அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்   வந்தே பாரத் விமான கட்டணங்கள் குறித்து சமூக வலைத் தளங்களில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் இது ஏர் இந்தியாவுக்கு நிதி சேர்க்கும் திட்டம் எனக் கோபத்துடன் பதிந்துள்ளனர்.