சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், திருமழிசையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதுகுறித்து சட்டப்பேரவையில் நகர்புற வளர்ச்சி துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதுக்கும் சென்னையில் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தவிர்க்கும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றியிருக்கும் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டு அதன்படி இயக்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொடர்பான மானியக் கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சென்னையை அடுத்த வண்டலூர், கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் 2022, அக்டோபர் முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.