சென்னை: பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வள்ளுவர் கோட்டம் புணரமைக்கப்படும் என  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வள்ளூவர் கோட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் சரியான பராமரிப்பு இன்றி கிடந்தது. இதை இன்று தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அவருடன் துறை அதிகாரிகளும் சென்றனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர்,  தமிழர்களின் அடையாளமே வள்ளுவர் தான். அவர் எந்த மதத்தையும் சாராதவர், அனைவருக்கும் பொதுவானவர். எனவே அவரது பெயரில் வள்ளுவர் கோட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர்.  கடந்த ஆட்சியாளர்களால் வள்ளுவர் கோட்டம் பராமரிக்கப்படாமல் சிதிலடைந்து உள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுக்காலத்தில் வள்ளுவர் கோட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. கட்டிடத்தின் மேல்தளம் முதல் கீழ்தளம் வரை அனைத்தும் மோசமான நிலையில் இருக்கிறது.தேரும் மோசமான நிலையில் இருக்கிறது.

அதிமுகவிற்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை, திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு தொடர்ந்து புறக்கணித்தனர், சமர்சீர் பாட புத்தகத்தில் இருந்தும் வள்ளுவர் படத்தை நீக்கினர்

5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வள்ளுவர் கோட்டத்தின் கட்டட அமைப்பு 68,275 சதுர அடி. இங்கு அமைக்கப்பட்டுள்ள தேர் 106 அடி உயரம் கொண்டது. விரைவில், இங்குள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து  பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புதுப்பிக்கப்படும்.  முதல்வர் உத்தரவின் பேரில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். பார்வையாளர்கள் குடும்பத்தோடு வந்து பார்த்துச் செல்லும் அளவிற்கு அனைத்தும் சீரமைக்கப்படும். அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் இங்கு நடைபெறும் வகையில் புனரமைப்பு பணிகள் நடைபெறும்.

தொடர்ந்து பேசிய அவர், வள்ளுவர் கோட்ட அரங்கத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது, மின்பழுதுகள் சரிசெய்து வண்ணம் பூசி, நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இவற்றையெல்லாம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி ஆதாரம் திட்டமிட்டு விரைவில் வள்ளுவர்கோட்டம் புனரமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.